செப். 1 முதல் டில்லி வாஷிங்டன் நேரடி விமான சேவைகள் நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு
செப். 1 முதல் டில்லி வாஷிங்டன் நேரடி விமான சேவைகள் நிறுத்தம்: ஏர் இந்தியா அறிவிப்பு
ADDED : ஆக 11, 2025 09:57 PM

புதுடில்லி: செப்டம்பர் 1ம் தேதி முதல் டில்லி வாஷிங்டன் இடையிலான நேரடி விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
ஆமதாபாத் விமான விபத்து சம்பவத்தை தொடர்ந்து, ஏர் இந்தியா விமான சேவைகளின் மீதான நம்பகத்தன்மை பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன. பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பயணிகளும் சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். அனைத்திற்கும் ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கமும் அளித்து இருந்தது.
இந் நிலையில், டில்லி - வாஷிங்டன் இடையேயான போயிங் 787-8 ட்ரீம்லைனர் நேரடி விமான சேவையை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி 2025 முதல் அமல்படுத்துவதாகவும் ஏர் இந்தியா செய்திக்குறிப்பின் மூலம் கூறி உள்ளது.
செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
பயணிப்போரின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக ஏர் இந்தியா 26 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களை மாற்றி அமைக்க தொடங்கி உள்ளது. இந்த விரிவாக்கம் 2026ம் ஆண்டின் பிற்பகுதி வரை இருக்கும் என்பதால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
செப்டம்பர் 1ம் தேதிக்கு பின்னர் வாஷிங்டன் அல்லது அங்கிருந்து ஏர் இந்தியா விமானங்களை முன்பதிவு செய்தவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மற்ற விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்தல் அல்லது முழுப்பணத்தையும் திரும்ப பெறுதல் உள்ளிட்ட மாற்று பயண ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
இவ்வாறு ஏர் இந்தியா கூறி உள்ளது.