ADDED : டிச 15, 2024 11:45 PM

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தலுக்கான, 70 தொகுதி களுக்கும் வேட்பாளர்களை ஆளும் ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. முதல்வர் ஆதிஷி, கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுடில்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, ஆம் ஆத்மி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தேசிய அளவில் 'இண்டி' கூட்டணியில் இருந்தாலும், டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என, முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துவிட்டார்.
ஏற்கனவே, 32 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 38 பேர் அடங்கிய நான்காவது மற்றும் கடைசி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. முதல்வர் ஆதிஷி, கல்காஜி தொகுதியிலும், அரவிந்த் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட உள்ளனர்.
அமைச்சர்கள் சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வேட்பாளர் பட்டியல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு நன்கு திட்டமிட்டு, விரிவான திட்டங்களுடன் தயாராக உள்ளோம். ஆனால், பா.ஜ.,வை எங்கும் காணவில்லை. அவர்களுக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை.
நல்ல அணி இல்லை. திட்டங்கள், தொலைநோக்கு பார்வை இல்லை. கெஜ்ரிவாலை நீக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய கோஷம், கொள்கையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.