ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தர கட்டுப்பாடு, ஆண்டுதோறும் ஆய்வு கட்டாயம்
ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தர கட்டுப்பாடு, ஆண்டுதோறும் ஆய்வு கட்டாயம்
ADDED : டிச 04, 2024 07:32 AM

புதுடில்லி: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருப்பதாவது: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்துள்ள உணவு பிரிவாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்பை கட்டாயம் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்வதுடன், மேம்படுத்தப்பட்ட தர நிர்ணயங்களுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். இதற்கான மத்தியஉரிமம் வைத்திருப்போர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை குறைக்கும் நோக்குடன், ஆண்டு ஆய்வுகளை சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
நுகர்வோருக்கு என்ன பயன்?
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்க உரிமம் பெறுவதற்கு முன், பதிவு செய்வதற்கு முன், ஆலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதிக ஆபத்து வகையில் ஒரு உணவுப்பொருள் சேர்க்கப்பட்டால் ஆய்வுகள் கடுமையாக நடைபெறும். இது நுகர்வோர் உடல் நலனை பாதுகாக்க உதவும். பாட்டில் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இரண்டில் இருந்தும் இரட்டைச் சான்றிதழ் பெற வேண்டும். இதை நீக்கக்கோரி நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. எனவே, பி.ஐ.எஸ்., சான்றிதழ் நீக்கப்பட்டு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தனது கட்டுபாட்டை கடுமையாக்கி உள்ளது.