ADDED : ஏப் 03, 2025 07:39 PM
மகிபால்பூர்: போலி போலந்து விசா மோசடி விவகாரத்தில் ஹரியானாவைச் சேர்ந்த ஏஜன்ட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2021 செப்டம்பர் 6ம் தேதி டில்லி விமான நிலையத்துக்கு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தர் பிரகாஷ், 22, சரப்ஜீத், 23, ஆகிய இரு பயணியர், போலந்து நாட்டுக்கு விமானத்தில் ஏறுவதற்காக சோதனை பகுதிக்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம் இருந்தது, போலி விசா என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு போலி விசா தயாரித்துக் கொடுத்ததாக குல்விந்தர் என்ற ஏஜன்ட் கைது செய்யப்பட்டார்.
போலந்து வழியாக போர்ச்சுக்கல் நாட்டுக்குச் செல்ல, குல்விந்தருக்கு பயணியர் இருவரும் தலா 3 லட்ச ரூபாய் கொடுத்திருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஹரியானா மாநிலம், குருஷேத்திராவைச் சேர்ந்த ககன்தீப் சிங், 36, என்ற ஏஜன்ட்டை போலீசார் தேடி வந்தனர்.
ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அமிர்தசரஸ் நகரில் தலைமறைவாக இருந்த ககன்தீப்பை போலீசார் அண்மையில் கைது செய்தனர்.
ககன்தீப் மீது ஏற்கனவே இரண்டு விசா மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.