ஜவுளி துறையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு: பிரதமர் மோடி
ஜவுளி துறையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு: பிரதமர் மோடி
ADDED : பிப் 27, 2024 12:06 AM

புதுடில்லி: “ஜவுளி துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்கும்,” என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
நாட்டின் மிகப்பெரிய சர்வதேச ஜவுளி நிகழ்வுகளின் ஒன்றான, 'பாரத் டெக்ஸ் 2024' என்ற கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நேற்று துவக்கி வைத்தார்.
பாரத் மைய மண்டபத்தில் நான்கு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழகத்தின் திருப்பூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் உட்பட பல்வேறு முன்னணி ஜவுளி நிறுவனங்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
சர்வதேச அளவில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 3,000 கண்காட்சியாளர்கள், 40,000 பார்வையாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
சர்வதேச தரத்திலான கண்காட்சியை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் ஜவுளித் துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை, 'விக்சித் ராஷ்டிரா'வாக மாற்ற முடிவு செய்துள்ளோம். விக்சித் பாரதத்தின் நான்கு முக்கிய துாண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள்.
குறிப்பாக நாட்டின் ஜவுளி துறை இந்த அனைத்து துாண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பாரத் டெக்ஸ் 2024 நிகழ்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கடந்த 2014ல் இந்திய ஜவுளி துறையின் சந்தை மதிப்பீடு, 7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டிள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நுால், துணி மற்றும் ஆடை உற்பத்தியில் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளி துறையின் தரக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் மத்திய அரசு, ஜவுளி உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்கும்.
கொரோனா பேரிடர் காலத்தில் அதை பரிசோதிக்கும் பி.பி.இ., கிட் மற்றும் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஜவுளி துறை பெரும் பங்காற்றியது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் வாயிலாக, எதிர்காலத்தில் நம் நாடு உலகளாவிய ஏற்றுமதி மையமாக நிச்சயம் மாறும். உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்து, தங்கள் சந்தைகளைப் பன்முகப்படுத்தும் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் தொழில் துறைகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

