அடிப்படை உரிமையை பறிக்க முடியாது; புத்தாண்டு பிரார்த்தனை வழக்கில் ம.பி., ஐகோர்ட் உத்தரவு
அடிப்படை உரிமையை பறிக்க முடியாது; புத்தாண்டு பிரார்த்தனை வழக்கில் ம.பி., ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 05, 2025 03:16 PM

போபால்: 'தனது மத அடிப்படையில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்வது அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் ஒருவரின் அடிப்படை உரிமை. மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆட்சேபனையின் அடிப்படையில் மட்டும் அதனை பறிக்க முடியாது' என ம.பி., ஐகோர்ட் கூறியுள்ளது.
ம.பி., மாநிலம் ஜபுவா மாவட்டத்தில் கத்வாடா கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு, ஜன.,1ல் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்த கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி மனு கொடுத்தார். முதலில் இதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம், பிறகு ஹிந்து அமைப்பினரின் ஆட்சேபனை காரணமாக அனுமதியை ரத்து செய்தது.
இதனையடுத்து, அனுமதி கேட்ட நபர், ம.பி., ஐகோர்ட்டில், அரசியலமைப்பின் 226வது விதிகளின் கீழ் மனுத் தாக்கல் செய்தார். அதில், புத்தாண்டு தினத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி சுபோத் அபயன்கர் பிறப்பித்த உத்தரவு: பிரார்த்தனை நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்த மனுதாரர், மாவட்ட நிர்வாகம் விதிக்கும் விதிமுறைகளின்படி நடந்து கொள்வதாக கூறினார். இதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம், ஹிந்து அமைப்பின் எதிர்ப்பு காரணமாக முன்னர் வழங்கிய அனுமதியை ரத்து செய்தது. ஆனால், இதற்கு முன்னர் மனுதாரரிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.
மனுதாரர், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆணடு துவக்கத்திலும் பிரார்த்தனை நடத்தி வருகிறார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆட்சேபனை தெரிவிக்கிறார் என்பதற்காக மட்டும், ஒரு இடத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை நடத்தலாம் என்ற அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட உறுதியை பறிக்க முடியாது.
மாவட்ட கலெக்டர், மனுதாரரிடம் எந்த விளக்கமும் கேட்காமல், மற்றொரு மதத்தை சேர்ந்தவர் ஆட்சேபனை தெரிவிக்கிறார் என்பதற்காக மட்டும் முன்னர் வழங்கிய அனுமதியை ரத்து செய்துள்ளார். இதனால், மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். பிரார்த்தனை கூட்டம் எந்த இடையூறும் இன்றி நடப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

