மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதி; மத்திய அமைச்சர் நிர்மலா திட்டவட்டம்!
மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீதம் நிதி; மத்திய அமைச்சர் நிர்மலா திட்டவட்டம்!
UPDATED : அக் 05, 2024 05:16 PM
ADDED : அக் 05, 2024 05:08 PM

புதுடில்லி: '' சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கான நிதியில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது ,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கான மொத்த திட்ட மதிப்பீட்டுச் செலவு ரூ.63,246 கோடியில் 65 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தை, மத்திய அரசின் திட்டமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதனால், பங்களிப்பும் உயர்ந்துள்ளது. இதுவரை 90 சதவீதம் அளவிற்கு மாநில அரசின் நிதியாக கொண்டு மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டது.
தற்போது மத்திய அரசின் திட்டமானதால் ரூ.33,593 கோடி முழுக்கடனும். சமபங்கு, சார்நிலைக் கடனாக ரூ.7,425 கோடியும் அடங்கும். இரு தரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 32,548 கோடி கடனாக நிதி திரட்ட மத்திய அரசு உதவி செய்துள்ளது. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும். திரட்டிய கடனில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டு, மேம்பாட்டு முகமைகளில் இருந்து பெறப்படும் கடன்கள், மாநில அரசுக்கானதாக இல்லாமல், மத்திய அரசின் கடனாக கருதப்படும். மத்திய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நேரடியாக நிதி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.