sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்வர் மீது விசாரணைக்கு அனுமதியளித்த கவர்னரை கண்டித்து ஆவேசம்! கர்நாடகா முழுதும் காங்கிரசார் போராட்டம்; பஸ்கள் மீது கல்வீச்சு

/

முதல்வர் மீது விசாரணைக்கு அனுமதியளித்த கவர்னரை கண்டித்து ஆவேசம்! கர்நாடகா முழுதும் காங்கிரசார் போராட்டம்; பஸ்கள் மீது கல்வீச்சு

முதல்வர் மீது விசாரணைக்கு அனுமதியளித்த கவர்னரை கண்டித்து ஆவேசம்! கர்நாடகா முழுதும் காங்கிரசார் போராட்டம்; பஸ்கள் மீது கல்வீச்சு

முதல்வர் மீது விசாரணைக்கு அனுமதியளித்த கவர்னரை கண்டித்து ஆவேசம்! கர்நாடகா முழுதும் காங்கிரசார் போராட்டம்; பஸ்கள் மீது கல்வீச்சு

2


ADDED : ஆக 20, 2024 06:15 AM

Google News

ADDED : ஆக 20, 2024 06:15 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'மூடா' முறைகேடு வழக்கில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அனுமதியளித்த கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து, மாநிலம் முழுதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். மங்களூரில் தனியார் பஸ் மீது கற்கள் வீசி சேதப்படுத்தினர். பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால், பொதுமக்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் அவதி

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள, 'மூடா' எனும் மைசூரு மேம்பாட்டு ஆணையம், முதல்வரின் மனைவிக்கு, 14 வீட்டு மனைகள் ஒதுக்கியது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சித்தராமையா தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், சமூக ஆர்வலர் ஆபிரகாம், மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் ஸ்நேகமயி கிருஷ்ணா, பிரதீப் குமார் ஆகியோரும், தனித்தனியாக கவர்னரிடம் புகார் அளித்தனர்.

இவற்றை பரிசீலித்த கவர்னர், முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்ட பிரிவின் கீழ் விசாரணை நடத்த, இம்மாதம் 17ம் தேதி அனுமதி அளித்தார். கவர்னரின் இந்த செயலை கண்டித்து, கர்நாடகா முழுதும் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு சுதந்திர பூங்காவில், மாநில காங்., தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் போராட்டம் நடந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கவர்னருக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தி, அமைச்சர்களே ஒருமையில் பேசினர். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி ஆவேசமாக பேசினர்.

ராஜ்பவன் முற்றுகை


பின், ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற அக்கட்சி தொண்டர்களை, போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்றனர். சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

முதல்வரின் சொந்த மாவட்டமான, மைசூரில் காலை முதலே போராட்டம் தீவிரமாக இருந்தது. கவர்னருக்கு எதிராக மட்டுமின்றி, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுக்கு எதிராகவும் காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.

நடுரோட்டிலேயே படுத்து உருளு சேவை, சட்டைகளை கழற்றி விட்டு அரை நிர்வாணத்தில் போராட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முதல்வர் படத்துக்கு பால் அபிஷேகம் செய்தும், கவர்னர் படத்துக்கு தீ வைத்தும் கோபத்தை காண்பித்தனர். மேலும், சாமுண்டி மலையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கடைகளை அடைத்து விட்டு, நேற்று கவர்னரை கண்டித்து அங்கேயே போராட்டம் நடத்தினர்.

இதனால், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்த பக்தர்கள், பூஜை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மைசூரு மாவட்டத்தில், 'பந்த்' நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பந்த் நடத்தாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

கவுன்சிலர் கைது


தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய தொண்டர்கள், நடுரோட்டில் டயர்களுக்கு தீ வைத்து கோஷம் எழுப்பினர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மீது கற்கள் வீசினர்.

இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி முழுதும் உடைந்தது. அங்கிருந்த போலீசார், கற்களை வீசிய காங்., நியமன கவுன்சிலர் கிஷோர் ஷெட்டி, தொண்டர்கள் ஷாஹுல் ஹமீத், அன்வர் ஆகிய மூன்று பேரை உடனடியாக கைது செய்தனர்.

கற்கள் வீசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பாகல்கோட் கலெக்டர் அலுவலகம் ஏராளமான தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கவர்னர் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. அருகில் இருந்த பீலகி தாலுகா, கிரிசாகர் கிராமத்தை சேர்ந்த ஹனுமந்த, தியாமப்பா என்ற இரண்டு தொண்டர்கள் மீது தீப்பற்றியது.

அவர்களின் முகம், முதுகு, மார்பு போன்ற பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களை, பாகல்கோட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஹாசன் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி கொண்டிருந்த போது, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பி.எம்.சாலையில், காங்கிரசார் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டயருக்கு தீ வைக்கப்பட்டது. அப்போது தீ பயங்கரமாக கொளுந்து விட்டு எரிந்தது.

அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த சஞ்சு என்ற மகளிர் ஏட்டு, தீயில் இருந்து தப்பிக்க முயற்சித்த போது, கீழே விழுந்தார்.

இதில், அவரது தலை தீயில் பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். தலைமுடி தீயில் கருகியது. அங்கிருந்தவர்கள் அவரை இழுத்து, தீயை அணைத்தனர்.

வாக்குவாதம்


ராய்ச்சூர் கலெக்டர் அலுவலகம் முன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் போசராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது, முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு மேடையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

சில காங்., பிரமுகர்கள் இருக்கைகள் கிடைக்காததால், அமைச்சர் முன்னிலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருகில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோலார் காங்கிரஸ் அலுவலகத்தில் திரண்ட அக்கட்சி தொண்டர்கள், கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, கலெக்டர் அக்ரம் பாஷாவிடம் மனு அளித்தனர்.

ஊர்வலத்தில், முதல்வரின் அரசியல் செயலர் நசீர் அகமது, எம்.எல்.ஏ.,க்ககள் கொத்துார் மஞ்சுநாத், நஞ்சேகவுடா, அனில்குமார், மாவட்ட காங்., தலைவர் லட்சுமி நாராயணா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாண்டியா, ராம்நகர், பெலகாவி, கலபுரகி, தாவணகெரே, தார்வாட் உட்பட மாநிலம் முழுதும், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தலைமையில் போராட்டம் நடந்தது.

கவர்னருக்கு மிரட்டல்

மங்களூரில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவான் டிசோசா பேசுகையில், ''முதல்வர் மீது விசாரணைக்கு அனுமதி அளித்ததை திரும்ப பெறாவிட்டால், வங்கதேச பிரதமரை வெளியேற்றது போல், கவர்னரையும் வெளியேற்றுவோம்,'' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மாநில போலீஸ் டி.ஜி.பி., அலோக் மோகனை வலியுறுத்தி உள்ளார்.








      Dinamalar
      Follow us