விரைவில் நாடு கடத்தப்படுகிறார் மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனர்
விரைவில் நாடு கடத்தப்படுகிறார் மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனர்
ADDED : அக் 12, 2024 01:23 AM

புதுடில்லி : 'மகாதேவ்' ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனர்களில் முக்கிய நபரான சவுரப் சந்திரசேகர், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், சமீபத்தில் முறைப்படி கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் இந்தியாவுக்கு விரைவில் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோர், 'மகாதேவ்' என்ற பெயரில், ஆன்லைன் சூதாட்ட செயலியை துவங்கி நடத்தி வந்தனர்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகருக்கு இருவரும் 2019ல் சென்றனர்.
லஞ்சம்
அங்கிருந்தபடி மகாதேவ் செயலியை அவர்கள் இயக்கி வந்தனர். இந்த சூதாட்ட செயலியை நம்பி விளையாடிய லட்சக்கணக்கானோர், பல கோடி ரூபாயை இழந்தனர்.
இதனால், சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோருக்கு, 6,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
இந்த விவகாரத்தில் சத்தீஸ்கர் அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தீஸ்கர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதில் நடந்த சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் நிறுவனர்களான சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோர் உட்பட பலர் மீது, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் இரண்டு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. காங்., தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், சவுரப் சந்திர சேகர், ரவி உப்பால் ஆகியோரை, கடந்த ஆண்டு அந்நாட்டு போலீசார் பிடித்தனர்.
இதுகுறித்து நம் நாட்டுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்களை வீட்டுக் காவலில் வைக்கும்படி நம் அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
கோரிக்கை
இதற்கிடையே, சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோருக்கு எதிராக, 'ரெட் கார்னர்' எனப்படும், தேடப்படும் குற்றவாளி என்பதற்கான நோட்டீசை பிறப்பிக்கும்படி, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீசுக்கு அமலாக்கத் துறையினர் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி, அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சவுரப் சந்திரசேகர், ரவி உப்பால் ஆகியோரை, துபாய் போலீசார் சமீபத்தில் முறைப்படி கைது செய்து நம் நாட்டுக்கு தகவல் அளித்தனர்.
துபாய்க்கு விரைந்து உள்ள நம் அதிகாரிகள், அந்நாட்டு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, இருவரையும் விரைவில் நம் நாட்டுக்கு அழைத்து வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

