ADDED : ஜன 30, 2025 11:49 PM

பெங்களூரு; ''காந்தி இல்லாவிட்டால், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நேற்று முதல்வர் சித்தராமையா மலர் துாவி வணங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி: மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம் மிகவும் மோசமான நாளாகும். நாட்டுக்காக காந்தி விட்டு சென்ற சித்தாந்தங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
காந்தி எப்போதும் அனைத்து மதத்தினருடனும் சகிப்பு தன்மையை போதித்தார். காந்தி, அம்பேத்கர் ஆகியோர் 'அரசியல் சாசனத்தில் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு' என்று கூறியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக அரசியல் அமைப்பு, கூட்டாட்சிக்கு எதிரான சக்திகள், நாட்டை சீரழிக்க முயற்சிக்கின்றன.
இரண்டும் காப்பாற்றப்பட வேண்டும். இதற்காக காங்கிரஸ் போராடி வருகிறது. மகாத்மாவை கொன்றவர்களை பா.ஜ.,வும், ஆர்.எஸ்.எஸ்.,சும் போற்றுகின்றன. காந்தி இல்லாவிட்டால், நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

