UPDATED : டிச 17, 2024 01:32 AM
ADDED : டிச 17, 2024 01:30 AM

வயநாடு : கேரளாவில் சுற்றுலா கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க முயன்ற பழங்குடியின நபரை, ஒரு கும்பல் தங்கள் காரில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் வயநாடு மாவட்டத்தின் கூடல்கடவு அருகே உள்ள தடுப்பணையை பார்வையிட வந்த இரு சுற்றுலா குழுக்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.
அப்போது, செம்மாடு பகுதி பழங்குடியினத்தைச் சேர்ந்த மாதன், 49, என்பவர், அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.
![]() |
இதையடுத்து, சுற்றுலாவுக்காக வந்திருந்த ஒரு தரப்பினர் மாதனை தாக்கியதுடன், அவரது கைகளை காரின் கதவில் சிக்க வைத்து, காரை வேகமாக இயக்கினர்.
தன் கைவிரல் சிக்கியதால் அலறிய மாதன், உடனே காரை நிறுத்துமாறு கூச்சலிட்டார்.
அதை பொருட்படுத்தாமல், அந்த கும்பல் அரை கி.மீ., துாரம் வரை காரை இயக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு சென்றது.
சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதால் மாதனின் கை, கால்கள் மற்றும் முதுகு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட அந்த காரின் உரிமையாளர், மலப்புரம் மாவட்டம் குட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.