ADDED : ஜூலை 08, 2025 09:40 PM
புதுடில்லி:ரயில் நிலையங்களில், கருப்பு மற்றும் ஊதா நிற பேக்குகளை மட்டுமே திருடி வந்த பீஹாரை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அமித்குமார், 37, கரண்குமார், 27, கவுரவ், 33, மஹதோ, 38, ஆகிய நான்கு பேரும், ரயில் நிலையங்களின் அருகேயுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
ரயில் நிலையங்களில், கருப்பு மற்றும் ஊதா நிற பைகளுடன் ஜவுளி வியாபாரிகள் போல சுற்றி வந்து, அதே கலரில் பயணியர் பை இருந்தால், அதை அபேஸ் செய்து விட்டு, இவர்கள் வைத்திருக்கும் பையை வைத்து விடுவர்.
இப்படி பலரிடம் பைகளை கொள்ளையடித்துள்ளனர். சமீபத்தில், ஸ்ரீமாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயிலில் பயணி ஒருவர், தன் கருப்பு நிற பையை பறிகொடுத்தார். அவர் அளித்த புகார் குறித்து விசாரிக்கும் போது நான்கு பேரும் பிடிபட்டனர். நான்கு பேரிடமும் இருந்து மொபைல் போன்கள், லேப் - டாப்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நடக்கிறது.