ADDED : நவ 05, 2025 02:17 AM

புதுடில்லி:டில்லியில், போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, புழக்கத்தில் விட்ட கும்பலில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையின் போது, கூடுதல் மதுபானங்களை வாங்கி, அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்க ஒரு கும்பல் முடிவு செய்தது. இதற்காக, போலியாக அச்சடித்த ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கடந்த ஆறு ஆண்டுகளாக, போலியாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வந்த விவேக் மவுர்யா, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரவி அரோரா, இவர்களுக்கு துணை புரிந்த ராகேஷ் அரோரா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
இந்த கும்பலை சேர்ந்தவர்கள், சிறையில் இருந்த போது ஏற்பட்ட பழக்கத்தில், கொள்ளை லாபம் சம்பாதிப்பது குறித்து, அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். சிறையிலிருந்து வெளி வந்ததும், போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு, சிக்கிக் கொண்டனர்.
அந்த கும்பல் வசமிருந்து, 3.24 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள், அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

