ADDED : மார் 06, 2025 10:51 PM
சாஸ்திரி பார்க்: தலைநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பிரபல திருமணங்களில் திருடி வந்த 'பேண்ட், பாஜா, பராத்' கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆடம்பரமாக நடத்தப்படும் திருமண நிகழ்ச்சிகளில் விலையுயர்ந்த பொருட்கள், பரிசுப்பொருட்கள் திருடு போவது அதிகரித்து வந்தது. தொடர் புகார்களால் போலீசாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட திருமண நிகழ்ச்சி, மண்டபங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.
ஒரு கும்பல், திருமண நிகழ்ச்சிகளில், உறவினர்கள் போல் கலந்து கொண்டு, கைவரிசை காட்டியதை போலீசார் கண்டுபிடித்தனர்.
தீவிர விசாரணைக்குப் பின் சாஸ்திரி பார்க் மெட்ரோ பணிமனை அருகே கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2,14,000 ரூபாய் ரொக்கம், ஒரு மொபைல் போன் மற்றும் பல வெள்ளி நகைகளை போலீசார் மீட்டனர்.
இதன் மூலம் சாஸ்திரி பார்க், ஸ்வரூப் நகர், ஜி.டி.பி., என்க்ளேவ் ஆகிய இடங்களில் திருமண நிகழ்ச்சிகளில் திருடிய மூன்று வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன.