ADDED : டிச 24, 2024 06:24 AM
பெங்களூரு: ஐ.டி., நிறுவன ஊழியரை மிரட்டி 11.80 கோடி ரூபாயை, சைபர் கும்பல் பறித்துள்ளது.
பெங்களூரு ஹெப்பால் ஜி.கே.வி.கே., லே - அவுட்டில் வசிப்பவர் விஜய்குமார், 39. ஐ.டி., நிறுவன ஊழியர். கடந்த நவம்பர் 25ம் தேதி தன் மொபைல் போனுக்கு வந்த அழைப்பை எடுத்து, விஜய்குமார் பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், 'டிராய் எனும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி' என்று கூறினார்.
'உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்திய வாங்கிய 'சிம்'மில் இருந்து சட்டவிரோத விளம்பரம், ஆபாச குறுந்தகவல் செல்கிறது. இதுபற்றி மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து உள்ளோம். விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
சிறிது நேரத்தில் இன்னொரு மொபைல் நம்பரில் இருந்து பேசிய, மற்றொரு நபர் தன்னை, மும்பை சைபர் கிரைம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
'உங்கள் ஆதார் கார்டை பயன்படுத்தி, வங்கிகளில் கணக்கு துவங்கி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்யப்படுகிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். விசாரணை ஒத்துழைக்காவிட்டால் உங்களை கைது செய்வோம்' என்றார்.
பயந்து போன விஜய்குமார், தன்னிடம் பேசிய நபர் கூறியபடி, 'ஸ்கைபே' செயலியை டவுன்லோடு செய்தார். அந்த செயலி மூலம் ஒருவரிடம் வீடியோ காலில் பேசினார். அந்த நபர் காக்கி உடை அணிந்து இருந்தார்.
'நாங்கள் கூறும் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்புங்கள். விசாரணை முடிந்ததும் திருப்பித் தருகிறோம்' என்று கூறி உள்ளனர். இதை நம்பிய விஜய்குமாரும் நவம்பர் 25ம் தேதி முதல் கடந்த 12ம் தேதி வரை, பல்வேறு தவணைகளில் பல வங்கிக்கணக்குகளுக்கு 11.80 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் 12ம் தேதிக்கு பின், விஜய்குமாருக்கு, யாரிடம் இருந்தும் அழைப்பு வரவில்லை. தன்னிடம் பேசியவர்களின் மொபைல் போன் நம்பரை அழைத்தபோது 'சுவிட்ச் ஆப்' என்று வந்தது.
அப்போது தான் தன்னை மிரட்டி பணம் பறித்து மோசடி செய்தது தெரிந்தது. இதுகுறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடக்கிறது.