ADDED : நவ 04, 2024 10:02 PM

பெங்களூரு; தீபாவளி பண்டிகை முடிந்ததை தொடர்ந்து, பெங்களூரின் மார்க்கெட், லே - அவுட்கள் உட்பட, பல்வேறு இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது.
இதை அள்ளி சுத்தம் செய்யாததால், பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் தசரா நேரத்தில், குவிந்த குப்பையை அகற்ற முடியாமல் துப்புரவு தொழிலாளர்கள் திணறினர்.
இதற்கிடையே மழை பெய்ததால், குப்பை அள்ளும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. பல இடங்களில் துர்நாற்றம் வீசியது. இப்போதும் கூட, குப்பை ஆங்காங்கே கிடப்பதை காணலாம்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை வந்ததால், நகரில் குப்பை அளவு அதிகரித்துள்ளது. பண்டிகைக்கு பயன்படுத்தப்பட்ட மாவிலை, வாழை மரம், பூசணிக்காய், பட்டாசு கழிவு, தீப்பெட்டிகள் என, குப்பை குவிந்துள்ளது.
கே.ஆர்.மார்க்கெட் அருகில் குப்பை மிக அதிகமாக தென்படுகிறது. பண்டிகைக்கு வியாபாரத்துக்காக கொண்டு வரப்பட்டு, விற்காமல் மிச்சமான வாழை மரம், மாவிலை, பூசணிக்காயை சாலை ஓரத்திலேயே போட்டுச் சென்றுள்ளனர்.
பழைய மெட்ராஸ் சாலை, துமகூரு சாலை, பல்லாரி சாலை, கனகபுரா சாலை, மைசூரு சாலைகளின், சர்வீஸ் சாலையில் குப்பை மலை போன்று குவிந்துள்ளது. பாதசாரிகள், வாகன பயணியர் நடமாட்டத்துக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்றும்படி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

