ADDED : செப் 27, 2024 08:16 AM

பெங்களூரு: குப்பை அள்ளுவது, அப்புறப்படுத்தும் பணியை ஒப்படைக்கும் விஷயத்தில், பெங்களூரு மாநகராட்சி மற்றும் திடக்கழிவு நிர்வகிப்பு கம்பெனி இடையே ஏற்பட்ட குழப்பதால், குப்பை பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் உருவாகும் குப்பையை, விஞ்ஞான ரீதியில் அப்புறப்படுத்தும் நோக்கில், பெங்களூரு மாநகராட்சியும், மாநில அரசும் ஒருங்கிணைந்து 'திடக்கழிவு நிர்வகிப்பு கம்பெனி' அமைத்துள்ளன. நடப்பாண்டு ஜூனில் இருந்து, வீடு, வீடாக குப்பை சேகரித்து, அப்புறப்படுத்தும் பொறுப்பை இக்கம்பெனி ஏற்றுள்ளது.
இக்கம்பெனி, ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தும் பில் விஷயத்தில், சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டது.
எனவே மாநகராட்சி சார்பிலேயே, ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் குப்பை அள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் பில் தொகை வழங்கவில்லை.
இதன் விளைவாக, ஒப்பந்ததாரர்கள் சில நாட்களாக குப்பை அள்ளுவதை நிறுத்தி உள்ளனர். குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை.
பொது மக்கள் வீடுகளில் குப்பையை சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். நகரின் பல இடங்களில், 'பிளாக் ஸ்பாட்'கள் உருவாகின்றன. ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 18 வரை, குப்பை பிரச்னை தொடர்பாக மாநகராட்சி சஹாயவாணி எண்ணுக்கு, 7,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மஹாதேவபுராவில் இருந்து மிக அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளன. விரைவில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும்படி, மக்கள் வலியுறுத்துகின்றனர்.