ADDED : மே 04, 2026 04:49 AM
புதுடில்லி: சமையல் எரிவாயுவை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, நம் நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேற்காசிய போர் பதற்றத்தால், உலகின் மிக முக்கியமான சரக்கு போக்குவரத்து கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் நம் நாடு உட்பட உலகம் முழுதும் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்ஷல் தீவுகளின் கொடி ஏந்தி வரும், 'எம்.டி., சர்வ சக்தி' என்ற சரக்கு கப்பல், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து நம் நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கப்பல், 46,313 டன் சமையல் எரிவாயுடன் வருகிறது.
இதில், 18 இந்தியர்கள் உட்பட மொத்தம், 20 பணியாளர்கள் உள்ளனர். இந்த கப்பல் வரும் 13ல், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வரும் எரிவாயுவின் அளவு, நம் நாட்டின் அரை நாள் தேவையை பூர்த்தி செய்யக்கூடியது. இது தற்போதைய வினியோகத் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சரி செய்ய உதவும் என, கருதப்படுகிறது.
