காஸ் சிலிண்டர் 'சரண்டர்'; குழாய் வழி எரிவாயுக்கு மாறிய 6,000 நுகர்வோர்
காஸ் சிலிண்டர் 'சரண்டர்'; குழாய் வழி எரிவாயுக்கு மாறிய 6,000 நுகர்வோர்
ADDED : மார் 31, 2026 12:27 AM

புதுடில்லி: சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில், பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும், 6,000 பேர், தங்கள் சிலிண்டர்களை, 'சரண்டர்' செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக, சமையல் எரிவாயு வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில், பல மாநிலங்களில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 'எஸ்மா' எனப்படும், அத்தியாவசிய பொருள் பாதுகாப்பு சட்டத்தில், மத்திய அரசு உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்தது.
அதில், 'பி.என்.ஜி., வசதி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர், அந்த வசதிக்கு மூன்று மாதங்களுக்குள் மாற வேண்டும். மறுப்பு தெரிவிக்கும் நுகர்வோருக்கு, சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படும்' என, தெரிவித்திருந்தது. அதே சமயம், பி.என்.ஜி., வசதி இல்லாத பகுதிகளில், அதை செயல்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவை ஏற்று, பி.என்.ஜி., இணைப்பு பெற்ற நுகர்வோர் பலர், தங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோக நிறுவனங்களிடம் திருப்பி அளித்து வருகின்றனர்.
இது குறித்து, பெட்ரோலியத் துறை செயலர் நீரஜ் மிட்டல் கூறுகையில், ''அரசின் உத்தரவை பின்பற்றி இதுவரை, 6,000 பேர் பி.என்.ஜி., இணைப்புக்கு மாறியுள்ளனர். அவர்கள் தங்கள் சமையல் காஸ் சிலிண்டர்களை சரண்டர் செய்துள்ளனர். சமையல் காஸ் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில், வாய்ப்பு உள்ளவர்கள் பி.என்.ஜி., இணைப்புக்கு மாற வேண்டும்,'' என்றார்.
