ADDED : ஜூன் 04, 2025 02:12 AM

குவஹாத்தி : காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில தலைவராக, லோக்சபா எம்.பி., கவுரவ் கோகோய் பதவியேற்றார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில், அங்கு கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் வருகிறது. அதன்படி, அசாம் மாநில காங்., தலைவராக இருந்த பூபன் குமார் போராவுக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா எம்.பி.,யான கவுரவ் கோகோயை அசாம் மாநில தலைவராக காங்., தலைமை நியமித்துள்ளது. இவர், அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன். லோக்சபா காங்கிரஸ் குழுவின் துணைத்தலைவராகவும் உள்ளார்.
குவஹாத்தியில் உள்ள கட்சியின் தலைமையகமான ராஜிவ் பவனில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
பதவி ஏற்றபின் கவுரவ் கோகோய் பேசுகையில், ''எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அசாமில் நீதி, ஒற்றுமை மற்றும் அமைதிக்காக போராடும் காங்கிரஸ் தலைமையிலான அரசை மீண்டும் கொண்டு வருவதே எங்கள் நோக்கம்,'' என்றார்.