அன்று ஐ.ஏ.எஸ்.... இன்றோ யுடியூப் மூலம் அட்வைஸ்...! நொடியில் மாறிய இளைஞரின் கதை
அன்று ஐ.ஏ.எஸ்.... இன்றோ யுடியூப் மூலம் அட்வைஸ்...! நொடியில் மாறிய இளைஞரின் கதை
ADDED : ஆக 17, 2024 08:43 AM

புதுடில்லி: ஐ.ஏ.எஸ். தேர்வில் வென்று, அதிகாரியாக பணியாற்றிய துடிப்புமிக்க இளைஞர், இன்று அனைத்தையும் ராஜினாமா செய்துவிட்டு யுடியூப் மூலம் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
ஐ.ஏ.எஸ்.
மக்கள் சேவையில், அதிகாரமிக்க பதவிகளில் இன்றளவும் கவனிக்கப்படுவது ஐ,ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பணிகள் தான். என்றாவது ஒருநாள் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ்., ஆகிவிட மாட்டோமா? என்று லட்சக்கணக்கானோர் இரவு, பகலாக யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.38வது ரேங்க்
தேர்வில் வென்று அதிகாரியாக இருக்கையில் அமர அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில் யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 38வது ரேங்க் எடுத்து அதிகாரியாக பணியாற்றி, பின்னர் ராஜினாமா செய்து தற்போது யுடியூப், ஆப் என மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார் ஒருவர். ஐ.ஐ.டி.
ஹரியானா மாநிலம் பஞ்சகுலா பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் கவுஷல். பள்ளிக்காலம் தொட்டே படிப்பில் படுகெட்டி. அதன் சாட்சியாக அவர் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் டில்லியில் உள்ள ஐ.ஐ.டி.யில் தமது கல்லூரி படிப்பை தொடர்ந்தார். படிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டேயிருக்க, ஏதோ ஒன்று தமது வாழ்க்கையில் வெறுமையாக இருப்பதாக உணர ஆரம்பித்தார் கவுஷல். திருப்தியில்லை
ஐ.ஐ.டி. படிப்பை பாதியில் விட்டுவிட்டு, பிட்ஸ் பிலானியில் பி.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். ஆனாலும், அவர் மனதில் ஏதோ ஒன்று ஓடிக் கொண்டே இருக்க.... வேறு ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து பட்டதாரியானார். அப்படியும் திருப்தியாகாத கவுஷல், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராக ஆரம்பித்தார்.எட்டிப்பார்த்த தாகம்
படிப்பில் படுகெட்டி என்பதால் ஜஸ்ட் லைக் தட் என்ற ஸ்டைலில், 2012ம் ஆண்டு யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 38வது ரேங்க் எடுத்து கலக்கினார் கவுஷல். சில காலம் ஐ.ஏ.எஸ்., பணி தொடர, மறுபடியும் உள்ளுக்குள் இருந்த தாகம் எட்டிப்பார்த்தது.புதிய வழி
ஐ.ஏ.எஸ்., பணியை நொடியில் உதறி தள்ளிவிட்டு, வெளியேறினார். தாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறியாமல் செய்வதாக அனைவரும் ஒரு பக்கம் நினைத்தும், விமர்சித்தும் கொண்டிருக்க... இப்போது புதிய வழியில் தமது பயணத்தை தொடர்ந்துள்ளார் கவுஷல்.வெற்றியாளர்
யுடியூப் சேனல், மொபைல் செயலி என வேறு வழியில் தமது ரூட்டை திருப்பி அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். அவரின் உரை, ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் என அனைத்தும் மாணவர்களுக்கு மிகவும் பிடித்து விட, ஒரு வெற்றியாளராக வலம் கொண்டு இருக்கிறார் கவுரவ் கவுஷல்.மனதிற்கு பிடித்தது
இந்த சமுதாயம் எதை பெரிதாக அங்கீரிக்கிறதோ, அதை அடைவது லட்சியம் அல்ல..! மாறாக, தனிப்பட்ட ஒரு மனிதனின் மனதிற்கு எது பிடிக்கிறதோ அதை அடைவது என்பதே லட்சியம் என்பதை உணர்த்துவதாக உள்ளது, கவுரவ் கவுஷலின் வாழ்க்கை...!

