கவுரி லங்கேஷ் கொலையாளிகள்: அடையாளம் காட்டிய சாட்சிகள்
கவுரி லங்கேஷ் கொலையாளிகள்: அடையாளம் காட்டிய சாட்சிகள்
ADDED : ஜன 19, 2024 12:40 AM

பெங்களூரு : பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில், கைதான மூன்று பேரை, சாட்சிகள் இருவர் அடையாளம் காட்டினர்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளர். கடந்த 2017 ம் ஆண்டு வீட்டின் முன்பு வைத்து, துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் மஹாராஷ்டிரா, புனேயை சேர்ந்த அமோல் காலே, விஜயபுராவின் பரசுராம் வாக்மோர், ஹூப்பள்ளியின் கணேஷ் மிஸ்கின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். கவுரி லங்கேஷை கொலை செய்வதற்காக, அமோல் காலே, பரசுராம் வாக்மோர், கணேஷ் மிஸ்கின் ஆகியோர், பெங்களூரு சீகேஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தது தெரிந்தது.
இதனால் அவர்கள் வசித்த வீட்டின் அருகே வசிப்பவர்களிடமும், விசாரணை நடந்தது. அப்போது மூன்று பேரும் தங்கியிருந்த வீட்டிற்கு, மேலும் சிலர் அவ்வப்போது வந்து சென்றதாக, சீகேஹள்ளியில் வசிக்கும் வாடகை கார் டிரைவர், மொபைல் போன் சர்வீஸ் செய்பவர் கூறி இருந்தனர். இதனால் அவர்களும் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தனர்.
கவுரி லங்கேஷ் கொலை குறித்து, தீவிர விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சாட்சிகள் இருவரையும் அழைத்து வந்து, அமோல் காலே, பரசுராம் வாக்மோர், கணேஷ் மிஸ்கின் ஆகியோர் முன் நிறுத்தினர்.
அவர்கள் மூன்று பேரையும், சாட்சிகள் இருவரும் சரியாக அடையாளம் காட்டியதாக, தகவல் வெளியாகி உள்ளது.

