கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவருக்கு ஜாமின் மறுப்பு
கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : மார் 18, 2024 05:11 AM
பெங்களூரு, : பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில், கைதானவருக்கு ஜாமின் வழங்க பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்தவர், பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். 2017ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு, வீட்டின் முன்பு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
கர்நாடகா, மஹாராஷ்டிராவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட, மோகன் நாயக் என்பவருக்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமின் கிடைத்தது.
இதையடுத்து வழக்கின் 13வது குற்றவாளியான சுஜித் என்பவர், ஜாமின் கேட்டு, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தார். அந்த மனுவை நீதிபதி முரளிதர் பாய் விசாரித்து வந்தார்.
கடந்த 15 ம் தேதி விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதி கூறுகையில், ''மனுதாரர் மீது மஹாராஷ்டிராவின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. வெடி பொருள் தடுப்பு சட்டம், ஆயுத தடை சட்ட வழக்கும் உள்ளது. மனுதாரர் ஜாமின் மனுவில் உடல்நிலை சரியில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.
''ஆனால் தீவிர நோயால் பாதிக்கப்பட்டது அல்லது சிறையில் உரிய சிகிச்சை இல்லை என்பதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. அவருக்கு ஜாமின் வழங்க எந்த காரணமும் இல்லை. எனவே ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என்றார்.

