காவி சால்வை அணிவதால் சித்தாந்தம் மாறாது குமாரசாமிக்கு ஜி.டி.தேவகவுடா வக்காலத்து
காவி சால்வை அணிவதால் சித்தாந்தம் மாறாது குமாரசாமிக்கு ஜி.டி.தேவகவுடா வக்காலத்து
ADDED : பிப் 07, 2024 11:03 PM

பெங்களூரு: ''மாண்டியாவில் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, பா.ஜ.,வின் காவி சால்வை அணிந்திருந்தார். அவர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு சென்றபோது, பக்தர் ஒருவர் போட்ட சால்வை,'' என, சாமுண்டீஸ்வரி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., - ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாண்டியாவில் பா.ஜ.,வினர் நடத்திய போராட்டத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்றார். அப்போது அவரது கழுத்தில் காவி சால்வை அணிந்திருந்தார் என, காங்கிரசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குமாரசாமி இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு, ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றிருந்தார். அப்போது பக்தர் ஒருவர், அவரின் கழுத்தில் காவி சால்வை அணிவித்தார். அது பா.ஜ.,வின் சால்வை கூட இல்லை. ஆனால் காங்கிரசார் இதை பெரிதாக்கி உள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளது. நமது சித்தாந்தம் வேறு; பா.ஜ., வின் சித்தாந்தம் வேறு. காவி சால்வை அணிந்தவுடன் நம் சித்தாந்தம் மாறாது.
ஜனதா கட்சியை கட்டி எழுப்பிய ஜெயபிரகாஷ் நாராயண், கட்சியை காப்பாற்றி வளர்த்த தேவகவுடா ஆகியோர் அமைத்துக் கொடுத்த பாதையில் நாங்கள் செல்கிறோம். கூட்டணி அமைப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது.
அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அமைப்பாளர்கள் சால்வை அணிவிப்பர். இதற்காக கட்சி சித்தாந்தத்தை கைவிட்டதாக அர்த்தமில்லை.
நம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவுக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டோம் என்று கூறுகிறார். ஆனால், மாநில காங்கிரஸ் அரசு, மானியம் வழங்கவில்லை என்று கூறுகின்றனர்.
எதுவாக இருந்தாலும் கூடி பேசுவதன் வாயிலாக தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் புதுடில்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடத்துவது சரியல்ல; தேவையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

