ஷிவமொகாவில் வாடகைக்கு வீடு எடுத்த கீதா சிவராஜ்குமார்
ஷிவமொகாவில் வாடகைக்கு வீடு எடுத்த கீதா சிவராஜ்குமார்
ADDED : மார் 11, 2024 07:24 AM

ஷிவமொகா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கீதா, தேர்தல் பணிகளை மேற்கொள்ள, ஷிவமொகாவில் வாடகைக்கு வீடு பிடித்து உள்ளார்.
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். இவரது மனைவி கீதா. முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள்; கீதாவின் தம்பி மது பங்காரப்பா. இவர், கர்நாடகா அரசின் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருக்கிறார்.
பல ஆண்டுகளாக ம.ஜ.த.,வில் இருந்த கீதா, கடந்த ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், காங்கிரஸ் வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல், ஷிவமொகா தொகுதி வேட்பாளராக கீதா அறிவிக்கப்பட்டார்.
பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன், ராகவேந்திரா மீண்டும் போட்டியிட தயாராகிறார். ஆனால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
எடியூரப்பா, ஷிவமொகா அரசியலில் செல்வாக்கு மிகுந்த நபர். இதனால், அவரது மகன் ராகவேந்திராவை, கீதாவால் எளிதில் தோற்கடித்து விட முடியாது. இதனால், ஷிவமொகாவில் தங்கி இருந்து, மாவட்டம் முழுதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் முடிவு செய்தார். இதற்காக, ஷிவமொகா டவுன் கல்லஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து உள்ளார்.
இந்த வீட்டில், தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. தேர்தல் தொடர்பான கூட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளார். தன் தந்தை வென்ற ஷிவமொகா லோக்சபா தொகுதியை மீண்டும் கைப்பற்ற திட்டம் வகுத்து வருகிறார்.

