2025 , ஜன.01 முதல் பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
2025 , ஜன.01 முதல் பொது சிவில் சட்டம் அமல் : உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
ADDED : டிச 18, 2024 10:21 PM

டேராடூன் : சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை உத்தரகண்ட் மாநில அரசு வரும் ஜன.01 2025-ம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம். திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் பரம்பரை சொத்துகளில் பங்கு உள்ளிட்டவற்றில், அனைத்து மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பா. ஜ.,தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது.
அக்கட்சி ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநில பா.ஜ., முதல்வர் புஷ்கர் சிங் தாமி , ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தார்.
அந்த குழு அளித்த வரைவு பரிந்துரைகளின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அம்மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடரின் போது பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின், கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்நிலையில் இச்சட்டம் வரும் 2025ம் ஆண்டு ஜன.-01-ம் தேதி முதல் உத்தரகண்ட் மாநிலம் முழுதும் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.