சீதாராம் யெச்சூரி மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
சீதாராம் யெச்சூரி மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
UPDATED : செப் 12, 2024 06:48 PM
ADDED : செப் 12, 2024 04:04 PM

புதுடில்லி: சுவாச தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்.,12) காலமானார். அவருக்கு வயது 72.,
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சில நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்னையால் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்ந்த சீதாராம் யெச்சூரிக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இருந்தும் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள், பிற கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
கடந்து வந்த பாதை
* 1952ல் சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. (ஆனால் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்)
* ஆந்திரா, டில்லியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
* டில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார்
* டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் எம்.ஏ., பட்டம் பெற்றார்.
* 1974ல் மாணவர் கூட்டமைப்பில் இணைந்தார்
* 1975ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்
* 1975ல் எமர்ஜென்சி காலகட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து கைதானார்.
* 2005ம் ஆண்டு முதல் 2017 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தார்.
* மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் ப்யூரோ என பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
* 2015ம் ஆண்டும் மா.கம்யூ., பொதுச்செயலாளரானார்.
* அன்று முதல் மறையும் வரை 3 முறை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தார்.
* 2021ல் இவரது மகன் ஆசிஸ் யெச்சூரி (34) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
உடல் தானம்
மறைந்த மா.கம்யூ., பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
இரங்கல்
ராகுல், காங்கிரஸ் எம்.பி.,
எனது நண்பரான யெச்சூரி இந்தியா குறித்த ஆழமான புரிதலை கொண்டிருந்தார். இந்தியாவின் சித்தாந்தங்களை பாதுகாப்பதில் அக்கறையும் கொண்டிருந்தார். அவருடனான நீண்டகால தொடர்பை இழந்துள்ளேன். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலின், தமிழக முதல்வர்
மறைந்த தோழர் சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம். இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையான அவரது மறைவு வேதனையளிக்கிறது. இளம் வயதில் இருந்தே நீதிக்காக அர்ப்பணிப்புடன் போராடிய பயம் அறியாத தலைவர் யெச்சூரி; மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், உழைக்கும் வர்க்கத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
இபிஎஸ், அதிமுக பொதுச்செயலாளர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அதிமுக சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சீதாராம் யெச்சூரி மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மோடி இரங்கல்
இடது சாரி தலைவர்களுள், திறமையான பாராளுமன்ற உறுப்பினராக முத்திரை பதித்தவர் சீத்தாராம் யெச்சூரிஎன பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.