சூரிய சக்தி மின்சாரம் தயாரித்தால் மாதந்தோறும் ரூ.15 லட்சம் மீதமாகும்
சூரிய சக்தி மின்சாரம் தயாரித்தால் மாதந்தோறும் ரூ.15 லட்சம் மீதமாகும்
ADDED : ஏப் 03, 2025 07:41 PM
விக்ரம்நகர்:டில்லி சட்டசபையில் 400 கிலோவாட் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, மாதந்தோறும் 15 லட்ச ரூபாய் மீதப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின் செய்தியாளர்களிடம் சபாநாயகர் கூறியதாவது:
சட்டசபை வளாகத்தில் சூரிய சக்தி பேனல்களை நிறுவி, 100 நாட்களில் 400 கிலோவாட் சூரிய சக்தி மின்சாரத்தை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
சூரிய சக்திக்கு சட்டசபை மாறுவதன் வாயிலாக, மக்களை ஊக்குவிக்க முடியும். மின் நுகர்வில் பூஜ்ஜிய மின்கட்டணம் என்ற செய்தியை மக்களுக்கு சட்டசபை அனுப்பும்.
சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, சட்டசபைக்கு மாதந்தோறும் 15 லட்ச ரூபாயை மீதப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பு காகிதம் இல்லா சட்டசபையாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
டில்லியில் புதிய அரசு பதவியேற்ற 40 நாட்களில் இரண்டு கூட்டத்தொடர்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஏழு நாள் பட்ஜெட் கூட்டத்தொடரில் 27.56 மணி நேரம் பயனுள்ள விவாதமாக நடத்தப்பட்டது. மார்ச் 25ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 36 உறுப்பினர்கள் 7.13 மணிநேரம் விவாதித்தனர்.
கூட்டத்தொடரில் மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த ஒரேயொரு கவன ஈர்ப்பு தீர்மானம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டசபை வளாகத்தில் இருந்தபோதிலும், அவர்கள் கலந்து கொள்ளாதது ஆச்சரியமாக இருக்கிறது.
மின்வெட்டு குறித்து பேசுவதைத் தடுத்ததாக பொய் சொல்லிவிட்டு, விவாதத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று நான் எதிர்க்கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். அடுத்த கூட்டத்தொடரில் இது குறித்து எதிர்க்கட்சி பதிலளிக்க வேண்டும்.
முந்தைய அரசின் செயல்திறன் குறித்த தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் எட்டு அறிக்கைகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீது நடந்த விவாதங்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
சட்டசபையில் முதல் முறையாக ஹிந்து புத்தாண்டு கொண்டாடப்பட்டது, மற்றொரு சாதனை.
இவ்வாறு அவர் கூறினார்.

