காதலனை கரம் பிடித்த ஜெர்மனி பெண் குந்தாபுராவில் ஹிந்து முறைப்படி 'டும் டும்'
காதலனை கரம் பிடித்த ஜெர்மனி பெண் குந்தாபுராவில் ஹிந்து முறைப்படி 'டும் டும்'
ADDED : ஜன 05, 2024 04:32 AM

உடுப்பி : நாடு கடந்து வந்த ஜெர்மனி பெண்ணுக்கும், உடுப்பி குந்தாபுரா காதலருக்கும் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது.
காதலுக்கு ஜாதி, மதம், இனம், நாடு என எந்த எல்லையும் இல்லை. ஆனாலும், சமூகத்தில் சில அவலங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டால், ஆணவ கொலை செய்வோர் இன்னும் இருக்கின்றனர். ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டாலும் பிரச்னை செய்வோர் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர், நாடு கடந்து வந்து காதலனை கரம் பிடித்த சம்பவம், உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் நடந்துள்ளது.
குந்தாபுரத்தின் ஆஜ்ரிய கரிமனே எனும் குக்கிராமத்தின் சுவர்ணா - பஞ்சு பூஜாரி தம்பதியின் மகன் சந்தன், 32. இவர் ஜெர்மனி நாட்டின் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு, அந்நாட்டின் பெட்ரா ஸ்ரூஆர் - பீட்டர் ஸ்ரூஆர் முனிஸ்தர் யுனிகப் தம்பதியின் மகள் காரின், 32, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு ஆசிரியராக பணியாற்றுகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அவரவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இரு குடும்பத்தினரும் கலந்து பேசி, திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜெர்மனியில் இருந்து, பெண் வீட்டார் குந்தாபுராவுக்கு வந்தனர். மூன்று நாட்களுக்கு முன்பு, ஹிந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
பட்டுப்புடவையுடன் மணப்பெண்ணும், பட்டு வேட்டி, சட்டையுடனும் புதுமணத் தம்பதி ஜொலித்தனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.