5 ஏக்கர் அரசு நிலத்தை திருப்பி தர கார்கே குடும்பமும் முடிவு!: தலைமை செயலருக்கு கவர்னர் எழுதிய கடிதத்தால் அதிரடி
5 ஏக்கர் அரசு நிலத்தை திருப்பி தர கார்கே குடும்பமும் முடிவு!: தலைமை செயலருக்கு கவர்னர் எழுதிய கடிதத்தால் அதிரடி
ADDED : அக் 13, 2024 11:06 PM

பெங்களூரு: தங்கள் அறக்கட்டளைக்கு அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை திரும்ப ஒப்படைக்க, மல்லிகார்ஜுன கார்கே குடும்பமும் முடிவு செய்துள்ளது. 'என்ன அடிப்படையில் நிலம் ஒதுக்கினீர்கள்' என விளக்கம் கேட்டு, தலைமை செயலர் ஷாலினிக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் எழுதியுள்ள கடிதத்தை அடுத்து, இந்த அதிரடி முடிவுக்கு கார்கே குடும்பம் வந்துள்ளது.
xகாங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 82; கர்நாடகாவை சேர்ந்தவர். இவரது குடும்பம், 'சித்தார்த்தா விஹார்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்துகிறது. இந்த அறக்கட்டளையில், மல்லிகார்ஜுன கார்கேயின் மனைவி ராதாபாய், மகனும், கர்நாடக தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே, இன்னொரு மகன் ராகுல் கார்கே, மருமகன் ராதாகிருஷ்ணா தொட்டமணி ஆகியோர் டிரஸ்டிகளாக உள்ளனர்.
கார்கே குடும்பத்திற்கு சொந்தமான இந்த அறக்கட்டளைக்கு, பெங்களூரு தேவனஹள்ளி அருகே வசந்தபுராவில் உள்ள விண்வெளி பூங்கா இடத்தில் இருந்து, 5 ஏக்கர் நிலத்தை, கர்நாடக அரசு ஒதுக்கியது. அந்த நிலம் எஸ்.சி., கோட்டாவில் ஒதுக்கப்பட்டது.
கெலாட்டிடம் புகார்
அமைச்சர் பிரியங்க் கார்கே தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை, அறக்கட்டளைக்கு ஒதுக்கியதாக, பா.ஜ., குற்றம்சாட்டியது. ஆனால், இதை பிரியங்க் கார்கே மறுத்தார். 'அரசு, தங்கள் அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கி இருப்பது, கல்வி நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு தான். எங்கள் அறக்கட்டளை 5 ஏக்கர் நிலத்தில், திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்கும்' என்று, பிரியங்க் கார்கே கூறி இருந்தார்.
ஆனாலும், சட்டவிரோதமாக அரசு நிலத்தை வளைத்து போட்டு இருப்பதாக கார்கே குடும்பத்தை, எதிர்க்கட்சிகள் வசைபாடின. கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், பிரியங்க் கார்கே, தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, 'என்ன அடிப்படையில், கார்கே குடும்பத்திற்கு 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது' என்று விளக்கம் அளிக்கும்படி, கர்நாடக தலைமை செயலர் ஷாலினிக்கு, கவர்னர் கடிதம் எழுதி இருந்தார்.
* அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
சித்தார்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, அரசு ஏன் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது என்பது பற்றி, நிலம் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து, நாங்கள் தொடர்ந்து விளக்கம் அளிக்கிறோம். ஆனால் பா.ஜ., எங்கள் குடும்பம் மீது குற்றச்சாட்டு கூறியது.
என் சகோதரர் ராகுல் கார்கே, 5 ஏக்கர் நிலத்தில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க முடிவு செய்தார். அவரை பற்றி பா.ஜ., தலைவர்களுக்கு தெரியாது. எனது சகோதரர் டி.ஆர்.டி.ஓ.,வில் விருது பெற்றவர். பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்க நினைத்தார். இதில் பா.ஜ., அரசியல் செய்து உள்ளது.
ராகுல் மிகவும் மென்மையாக சுபாவம் கொண்டவர். தனிப்பட்ட அரசியலால் அவர் அலுத்து விட்டார். இதனால் கடந்த மாதம் 22ம் தேதி, நிலத்தை திரும்ப பெற்று கொள்ளும்படி, கர்நாடக தொழில் வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். நிலத்தை திரும்ப பெற ஆணையமும் ஒப்புக்கொண்டு உள்ளது.
இப்போதும் கூட நான் பா.ஜ.,வுக்கு சவால் விடுகிறேன். நாங்கள் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கினோம் என்று நிரூபித்து காட்டட்டும். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு, எந்த அடிப்படையில் பி.சி.சி.ஐ., செயலர் பதவி கொடுத்தனர்.
என் மீதும், அப்பா மீதும் இருந்த அரசியல் வெறுப்பை, எனது சகோதரர் ராகுல் மீது பா.ஜ., காட்டியது. நாங்கள் கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வந்தோம். எங்கள் குடும்பத்தில் நான், அப்பா, மாமா தவிர வேறு யாரும் அரசியலில் இல்லை. எங்களுக்காக குடும்பத்தினர் பிரசாரம் கூட செய்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
----------
பாக்ஸ்...
-------
நாடகம் எடுபடவில்லை
இந்நிலையில், நிலத்தை திரும்ப பெற்று கொள்ளும்படி, கர்நாடக தொழில் வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்திற்கு ராகுல் எழுதிய கடிதம், நேற்று வெளியானது.
இது குறித்து, மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், ''சித்தார்த்தா விஹார் அறக்கட்டளைக்கு அரசு ஒதுக்கிய, 5 ஏக்கர் நிலத்தை திரும்ப எடுத்து கொள்ளும்படி, கடிதம் எழுதிய ராகுல் கார்கேயை நான் பாராட்டுகிறேன். சட்டத்திற்கு உட்பட்டு நிலம் வாங்கியதாக, பிரியங்க் கார்கே கூறினார்.
''அப்படி இருந்தால், நிலத்தை திரும்ப ஒப்படைத்தது ஏன். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி நடிக்கும், பிரியங்க் கார்கேயின் நாடகம் இங்கு எடுபடவில்லை,'' என்றார்.
மைசூரு முடாவில் இருந்து மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை, சட்டவிரோதமாக வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, 14 மனைகளையும் பார்வதி திரும்ப ஒப்படைத்தார்.
அதேபோல, அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து, கவர்னர் விளக்கம் கேட்டதால், தங்கள் குடும்பத்தின் மீதும், நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற பயத்தில், கார்கே குடும்பமும் நிலத்தை ஒப்படைத்து உள்ளது.
***