ADDED : அக் 01, 2024 12:17 AM

பெங்களூரு : 'பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஏன் இவ்வளவு வெறுப்பு அரசியல் செய்கிறார்?' என, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பினார்.
ஜம்முவில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து நீக்கும் வரை நான் உயிருடன் தான் இருப்பேன்' என பேசியிருந்தார்.
இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியின் வெறுப்பு அரசியலின் அளவு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று முன்தினம் பேசியதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
மோடியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் வரை, நான் உயிருடன் தான் இருப்பேன் என்று கார்கே கூறியது, எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கட்சித் தலைவர் என்ற முறையில், கட்சியை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும். அதை விடுத்து, வெறுப்பு அரசியல் செய்வது சரியல்ல.
எனினும் கார்கே உடல் நிலை சரியில்லாமல் இருப்பதை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, அவரது உடல் நிலை குறித்து விசாரித்தார். இது எங்கள் கட்சியின் அர்ப்பணிப்பையும், ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கிறது.
எதிரியாக இருந்தாலும் சரி; எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவர்களை மதிப்பது நமது கலாசாரம். அவருக்கு கடவுள் மேலும் ஆரோக்கியம் தர வேண்டும். 2047ல் வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.