மேகவெடிப்பால் பேய் மழை: உத்தரகண்ட், ஹிமாச்சலில் இதுவரை 12 பேர் பலி; 36 பேர் மாயம்
மேகவெடிப்பால் பேய் மழை: உத்தரகண்ட், ஹிமாச்சலில் இதுவரை 12 பேர் பலி; 36 பேர் மாயம்
ADDED : ஆக 01, 2024 11:32 AM

சிம்லா: வடமாநிலங்களில் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரகண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டு, கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்டில் தெஹ்ரி, ஹரித்வார், ரூர்க்கி, சமோலி, டேராடூன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தெஹ்ரி மாவட்டம் ஞானசாலியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
சார்தாம் யாத்திரை செல்பவர்கள் பயன்படுத்தும் முக்கிய பாலம் இந்த கனமழையால் சேதமடைந்த நிலையில், அதை சீரமைக்க 4 முதல் 5 நாட்களாகும் என்று தெஹ்ரி கலெக்டர் மயூர் தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஹிமாச்சலில் சிம்லா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ராம்பூர் பகுதியில் 36 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கடும் மழைக்கு மத்தியில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக ராம்பூர் துணை கமிஷனர் அனுபம் காஷ்யப் தெரிவித்தார்.