ADDED : டிச 13, 2024 05:26 AM

பொதுவாக சிறு வயது குழந்தைகளுக்கு, ஏதாவது றாஒரு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் பெரும்பாலானோரின் கனவுகள் நிறைவேறுவது இல்லை. இதற்கு சரியான ஆதரவு, ஊக்கம் கிடைக்காதது தான் காரணம்.
விளையாட்டில் சாதித்த பெரும்பாலான வீரர்களுக்கு பின், அவர்களுக்கு முதுகெலும்பாக யாராவது ஒருவர் நின்று இருப்பர்.
புற்றுநோயால் தந்தை இறந்த நிலையில், தாயின் அரவணைப்பு, ஆதரவில் 16 வயது சிறுமி ஒருவர், நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்து உள்ளார்.
பெங்களூரை சேர்ந்தவர் ஹஷிகா ராமசந்திரா, 16. நீச்சல் வீராங்கனையான இவர், கடந்த செப்டம்பர் 10 முதல் 13ம் தேதி வரை, மங்களூரு ஹெம்மேகெரேயில் நடந்த 77வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார். ப்ரீஸ்டைல் போட்டியில் 400 மீட்டர் துாரத்தை 4 நிமிடம் 24 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ரிச்சா மிஸ்ரா, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு 400 மீட்டர் துாரத்தை 4 நிமிடம் 25 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ரிச்சாவின் 13 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஹஷிகா.
இந்த சாதனையை ஹஷிகா அவ்வளவு எளிதாக படைத்து விடவில்லை. நிறைய கஷ்டங்களை அனுபவித்து உள்ளார். ஹஷிகா 4 வயதில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார். அவருக்கு தந்தை ராமசந்திரா, தாய் லதா ஆதரவாக இருந்தனர்.
கடந்த 2017ல் ராமசந்திரா புற்றுநோயால் இறந்தார். தந்தை இறந்ததற்கு பின், ஹஷிகாவுக்கு அவரது தாய் லதா ஆதரவும், ஊக்கமும் கொடுத்தார்.
நீச்சல் வீராங்கனையாக வர வேண்டும் என்ற மகளின் ஆசையை நிறைவேற்ற, சொத்துகளை விற்று மகளுக்கு பயிற்சி கிடைத்த செய்தார் லதா.
நீச்சல் வீராங்கனை நிஷா மில்லட்டை தனது ரோல்மாடலாக கொண்டு, அவரை போன்று சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக நீச்சல் போட்டியில் ஜொலிக்க வேண்டும் என்பது ஹஷிகாவின் ஆசையாம்.
அந்த பயணத்தை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டு இருக்கிறார். - நமது நிருபர் -

