ADDED : அக் 06, 2024 08:37 PM
ஜெயநகர்:
சிறுமி கொலை செய்து ஐந்து மாதங்களாகியும் துப்புக்கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பெங்களூரு ஜெயநகரின் முதல் ஸ்டேஜில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முரளிதர், ஸ்ருதி தம்பதி வசிக்கின்றனர். தம்பதிக்கு கர்கி, 13, என்ற மகள் இருந்தார். இவர் தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மே 22ம் தேதி மாலை, ஸ்ருதி தன் தங்கை மற்றும் மகளுடன் சாப்பிட வெளியே சென்றார். இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பினர். இரவு 10:30 மணிக்கு கர்கி, தன் அறைக்கு உறங்க சென்றார். மறுநாள் காலை 6:30 மணிக்கு ஸ்ருதி, மகளின் அறைக்கு சென்று எழுப்பினார்.
படுக்கையிலேயே மகள் சிறுநீர் கழித்திருப்பதை பார்த்து, பீதியடைந்த தாய், அலறி கூச்சலிட்டார். கணவர் முரளிதரிடம் கூறினார். அதன்பின் அதே அடுக்குமாடியில் வசிக்கும் டாக்டரை அழைத்து வந்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அதன்பின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், வழியில் சிறுமி இறந்ததாக கூறினார்.
மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, திலக்நகர் போலீஸ் நிலையத்தில் முரளிதர் புகார் செய்தார். அதன்பின் போலீசார், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில், சிறுமியை மூச்சு திணறவைத்துக் கொன்றதாக அறிக்கை கூறியது.
தடயவியல் ஆய்வகமும் சிறுமி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. அதன்பின் போலீசார் விசாரணையை துவக்கினர். பல கோணங்களில் விசாரித்தும் கொலையாளியை கண்டறிய முடியவில்லை.
கொலை நடந்தபோது, சிறுமியின் பெற்றோரை தவிர, வேறு யாரும் இருக்கவில்லை. எனவே கொலையாளியை கண்டுபிடிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.