ADDED : ஜன 11, 2025 11:38 PM
பத்தனம்திட்டா: கேரளாவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, 18 வயது தடகள வீராங்கனை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, 15 பேரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த, 18 வயதாகும் தடகள வீராங்கனை, குழந்தைகள் நலத்துறையில் சமீபத்தில் புகார் அளித்தார்.
அதில், தன் 13வது வயதில், ஆபாச வீடியோக்களை காட்டி, பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
குழந்தைகள் நலத்துறை பரிந்துரையின்படி, இது குறித்து 'போக்சோ' சட்டத்தின் கீழ், பத்தனம்திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஐந்து ஆண்டுகளில், சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர், அவரது நண்பர்கள் மற்றும் சிறுமியின் பயிற்சியாளர் உட்பட, 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக இதுவரை, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட தடகள வீராங்கனை, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.