துணி கடைக்காரருக்கு கத்தி குத்து இளம்பெண், காதலன் கைது
துணி கடைக்காரருக்கு கத்தி குத்து இளம்பெண், காதலன் கைது
ADDED : செப் 19, 2024 05:48 AM
சுத்தகுண்டேபாளையா: துணிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்திய, முன்னாள் பெண் ஊழியர், காதலன் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் ஹிதேந்திர குமார், 59. துணிக்கடை நடத்துகிறார். இவரது கடையில் 27 வயது இளம்பெண் கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்ந்தார். கடந்த மாதம் பணியில் இருந்து நின்று விட்டார்.
கடந்த 14ம் தேதி ஹிதேந்திர குமாரிடம் மொபைல் போனில் பேசிய இளம்பெண், 'உங்களை சந்திக்க வருகிறேன். சுத்தகுண்டேபாளையாவில் உள்ள, பூங்காவிற்கு வாருங்கள்' என்று அழைத்தார்.
பூங்காவில் சந்தித்த போது, இளம்பெண்ணிடம், ஹிதேந்திர குமார் காதலை வெளிப்படுத்தி உள்ளார். இளம்பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். கடந்த 16ம் தேதி பூங்காவில் இருவரும் மீண்டும் சந்தித்து பேசினர்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், ஹிதேந்திர குமாரிடம் தகராறு செய்ததுடன், அவரது தொடை, வயிறு, முதுகில் கத்தியால் குத்தினார். பின், இளம்பெண்ணும், வாலிபரும் அங்கிருந்து தப்பி சென்றனர். ஹிதேந்திர குமாரை, அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தன்னை கொல்ல முயன்றதாக, சுத்தகுண்டேபாளையா போலீசில் இளம்பெண், வாலிபர் மீது அவர் புகார் செய்தார். இளம்பெண்ணும், அவரது காதலன் சித்து, 27 என்பவரும் கைது செய்யப்பட்டனர். ஹிதேந்திர குமாரை கத்தியால் குத்தியதற்கான காரணத்தை, இருவரும் கூற மறுக்கின்றனர். விசாரணை நடக்கிறது.