நகையை திருப்பி கேட்ட முன்னாள் காதலன் விஷம் கொடுத்து கொல்ல முயன்ற காதலி
நகையை திருப்பி கேட்ட முன்னாள் காதலன் விஷம் கொடுத்து கொல்ல முயன்ற காதலி
ADDED : மார் 16, 2025 02:51 AM
ஹமிர்பூர்: உத்தர பிரதேசத்தில், நகை, பணத்தை திருப்பிக் கேட்ட முன்னாள் காதலனை, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடித்து உதைத்த காதலி, அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லிவ் இன்
உ.பி.,யின் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைலேந்திர குப்தா; தனியார் நிறுவனத்தில், மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார்.
இவர், அதே மாவட்டத்தின் கலிபஹாரி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, நான்கு ஆண்டுகளுக்கு முன் சந்தித்தார்.
இருவருக்கும் இடையேயான நட்பு, காதலாக மாறியது. சைலேந்திர குப்தாவும், அவரது காதலியும் திருமணம் செய்து கொள்ளாமல், வாடகைக்கு வீடு எடுத்து, 'லிவ் இன்' முறையில் வாழ்ந்து வந்தனர்.
அப்போது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை, காதலிக்கு சைலேந்திர குப்தா வாங்கிக் கொடுத்தார்.
மேலும், காதலியின் வங்கிக் கணக்குக்கு, அவ்வப்போது பணமும் அனுப்பினார். அதன்படி, 4 லட்சம் ரூபாய் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், வேறொரு நபருடன் காதலிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த சைலேந்திர குப்தா, அவருடனான காதலை முறித்துக்கொண்டார்.
சமீபத்தில், லிவ் இன் முறையில் வாழ்ந்த வாடகை வீட்டுக்கு அவர் சென்றார். அப்போது, தான் வாங்கிக் கொடுத்த நகை, பணத்தை திருப்பித் தரும்படி, காதலியிடம் கேட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த காதலி, தன் கூட்டாளிகள் சதாப் பேக், தீபக், ஹேப்பி ஆகியோருடன் சேர்ந்து, சைலேந்திர குப்தாவை சரமாரியாக அடித்து, உதைத்தார். பின், அவருக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து, அங்கிருந்து தப்பினார்.
மாவட்ட மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சைலேந்திர குப்தா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்படி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.