வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா!
வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா!
UPDATED : அக் 23, 2024 02:46 PM
ADDED : அக் 23, 2024 01:37 PM
முழு விபரம்

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிட இன்று (அக்.,23) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கேரள மாநிலம், வயநாடு லோக்சபா எம்.பி.,யாக வெற்றி பெற்ற ராகுல், ரேபரேலி எம்.பி., பதவியை தக்க வைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அத்தொகுதிக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா, இடது ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சத்யன் மொகேரி, பா..ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று(அக்.,23) வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார். கல்பெட்டா பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பிரியங்கா பேரணியாக சென்றார். பிரியங்காவுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல், சோனியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாய்ப்பு தாருங்கள்!
இதற்கிடையே, வயநாட்டில் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பலமுறை கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்துள்ளேன். முதன் முறையாக இப்போது எனக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறேன். 17 வயதில் எனது தந்தைக்காக ஓட்டு சேகரித்தேன். உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் ஜாதி மத, பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். இந்த பேரணியிலும், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அகிம்சை
வயநாடு மக்களை பிரிந்து சென்றது ராகுலுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளித்தது. வயநாடு நிலச்சரிவின் போது, அங்குள்ள மக்களின் உதவும் பண்பு வியப்பளித்தது. அத்தகைய சமூகத்தின் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதுவே எனக்கு பெருமை. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வயநாட்டில் மருத்துவக் கல்லூரி துவங்கப்படும். உண்மை, அகிம்சை, நீதிக்காக நாம் இன்று போராடி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
2வது தாய்
வயநாட்டில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: என்னை ஏற்றுக் கொண்டதைப் போல் பிரியங்காவையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வயநாட்டிற்கு நான் எப்போது வேண்டுமானாலும் சொந்த வீட்டிற்கு வருவது போல் வருவேன். சகோதரி பிரியங்கா தான் எனக்கு இன்னொரு தாயாக இருக்கிறார்.
என் அம்மா இங்கே அமர்ந்திருக்கிறார். என் அப்பா இறந்தபோது, என் அம்மாவைக் கவனித்துக்கொண்டது என் சகோதரி. அப்பா இறக்கும் போது அவளுக்கு 17 வயது. எனது சகோதரி தனது குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.
ஒற்றுமை
காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது: இன்று, ஒற்றுமையை நோக்கி முன்னேற நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். ரேபரேலி சோனியாவின் தொகுதி என்பதால் ராகுல் தக்க வைத்து கொள்ள முடிவு செய்தார். என்ன செய்வது என்று ராகுல் யோசித்துக் கொண்டிருந்தார். இருப்பினும், இறுதியில் வயநாட்டில் பிரியங்காவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். பிரியங்காவுக்கு இன்று டிக்கெட் கொடுத்துள்ளோம் என்றார்.