பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூரால் கடுப்பாகும் காங்கிரஸ்
பிரதமர் கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி: சசி தரூரால் கடுப்பாகும் காங்கிரஸ்
ADDED : நவ 18, 2025 03:37 PM

புதுடில்லி: டில்லியில் நேற்று (நவ.,17) பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி அவரை பாராட்டி காங்கிரஸ் எம்பி சசி தரூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தலைமை, அக்கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்பி சசி தரூர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அவர் பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க காங்கிரசின் எதிர்ப்பையும் மீறி வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் அடிக்கடி பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார். இதனால், சசி தரூரை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடியை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் சசி தரூர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி பங்கேற்ற கருத்தரங்கம் ஒன்றில் நானும் பங்கேற்றேன். இந்தியா வளர்ச்சி பெறுவதற்கான நேர்மறையான மாற்றங்கள் குறித்தும், காலனித்துவத்துக்கு பிந்தைய மனநிலை பற்றியும் பேசினார்.
பிரதமர் தனது உரையில், துடிப்பான பொருளாதாரம் காரணமாக, இந்தியா வெறும் வளரும் சந்தையல்ல. உலகத்துக்கான வளரும் மாடல் எனக்கூறியதுடன், எப்போதும் நான்( பிரதமர் மோடி) தேர்தல் மனநிலையில் இருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர். ஆனால், மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் உணர்ச்சிகரமான மனநிலையில் இருக்கிறேன் எனக்குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் தனது பேச்சில் முக்கிய அம்சமாக, மெக்காலேயின் 200 ஆண்டுகால அடிமை மனநிலை முறியடிப்பது பற்றிய கருத்து அமைந்தது. இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள் மற்றும் அறிவு அமைப்புகளில் பெருமையை மீட்டெடுக்க 10 ஆண்டு தேசிய இயக்கத்துக்கு அழைப்பு விடுத்தார்.
அவரின் உரை பொருளாதார கண்ணோட்டமாகவும், நடவடிக்கைக்கான கலாச்சார அழைப்பாகவும் அமைந்தது. முன்னேற்றத்துக்காக தேசம் துடிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. இவ்வாறு அந்தப் பதிவில் சசி தரூர் கூறியுள்ளார்.
பீஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியை சசி தரூர் மீண்டும் பாராட்டியிருப்பது அக்கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

