ADDED : ஏப் 30, 2025 06:46 AM

மூணாறு; மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.2 கோடி செலவில் கண்ணாடி ' வாட்ச் டவர்' தயாராகி வருகிறது.
இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் நாட்டில் மிகவும் நீளமான கண்ணாடி நடை பாலம் (120 அடி) கடந்த 2023 செப்.6ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த நடை பாலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மாவட்டத்தில் முதன்முதலாக மூணாறில் கண்ணாடி ' வாட்ச் டவர்' தயாராகி வருகிறது. தேவிகுளம் ரோட்டில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மாவட்ட சுற்றுலா துறை தனியார் ஒத்துழைப்புடன் ரூ.2 கோடி செலவில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
அந்தரத்தில் 34 மீட்டர் நடை பாதையும், 27 மீட்டர் கண்ணாடி நடை பாதையும் வாட்ச் டவரில் அமைக்கப்படுகிறது.
சிறப்பு: வாகமண் கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் மட்டும் செல்லலாம். அவர்கள் வந்த பிறகு தான் அடுத்த குழு செல்ல முடியும். ஆனால் கண்ணாடி வாட்ச் டவரில் இடைவெளி இன்றி தொடர்ந்து பயணிகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப 27 மீட்டர் வீதம் ' வி' வடிவில் இரண்டு புறமும் கண்ணாடி நடை பாலம் அமைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
வரும் மே இறுதிக்குள் வாட்ச் டவர் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

