ADDED : மே 16, 2024 04:36 AM

அலுவலகம், வீடு என, தினமும் அலைபாயும் பலரும், வாரம் ஒருநாள் குடும்பத்துடன் பொழுது போக்க விரும்புவது சகஜம். இவர்களை இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்கள், கைவீசி அழைக்கின்றன.
பெங்களூரை போன்ற நகரங்களில் வசிப்போரின் வாழ்க்கை, மிகவும் பரபரப்பானது. தினமும் வீடு, அலுவலகம் என, அலைய வேண்டியிருக்கும். ஓய்வின்றி உழைக்கும் போது, ஒரு நாளாவது பிக்கல், பிடுங்கல் இல்லாமல் குடும்பத்துடன் உல்லாசமாக, ஓய்வாக பொழுது போக்க மாட்டோமா என, மனமும், உடலும் ஏங்கும். இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.
இது போன்று ஏக்கத்தில் இருப்பவர்களை, மடியில் போட்டு தாலாட்ட இயற்றை அன்னை காத்திருக்கிறாள். பொதுவாக மலைப்பிரதேசங்கள் என்றால், ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் போன்ற நகரங்கள், சட்டென நினைவுக்கு வரும். ஆனால் பெங்களூருக்கு வெகு அருகிலேயே, மனதை மகிழ்விக்கும் மலைப்பிரதேசங்கள் உள்ளது, பலருக்கும் தெரிவதில்லை என்பது, வருத்தமான விஷயம்தான்.
ஊட்டி போன்ற நகரங்களுக்கு, ஒரே நாளில் சென்று, இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு வர முடியாது. ஒரே நாளில் சுற்றுலா சென்று வர, அருமையான இடங்கள் பெங்களூருக்கு அருகில், ராம்நகரில் உள்ளன. குடும்பத்துடன் பொழுது போக்க தகுதியான இடங்கள்.
* சாவனதுர்கா மலை:
ராம்நகர், மாகடியில் அமைந்துள்ளது, சாவனதுர்கா மலை. பெங்களூரில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ளது. இங்கு இயற்கை அழகு கொட்டி கிடக்கிறது. மலை மீது நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பசுமையான காட்சிகள் தென்படும். மனதுக்கு அமைதி, நிம்மதியை தரும்.
பெங்களூரில் வசிக்கும் பலருக்கும், இந்த இடம் பேவரிட். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில், நண்பர்கள், குடும்பத்துடன் இங்கு வந்து ஆடிப்பாடி, மகிழ்ச்சியாக பொழுது போக்கிவிட்டு செல்கின்றனர்.
சாவனதுர்கா மலையில், பிரசித்தி பெற்ற நரசிம்மசுவாமி, வீர பத்ரேஸ்வரா சுவாமியை தரிசிக்கலாம். சாவனதுர்காவுக்கு வரும் வழியில், மாகடியின் ரங்கநாதச சுவாமி, மஞ்சினபெலே அணையை கண்டு ரசிக்கலாம்.
* கோட்டகல் திம்மப்பன மலை:
ராம்நகரின், கோட்டகல் கிராமத்தில், கோட்டகல் திம்மப்பன மலை உள்ளது. ராம்நகரில் இருந்து 10 கி.மீ., தொலைவிலும், பெங்களூரில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும், இந்த மலை உள்ளது. மலை உச்சி வரை வாகனத்தில் செல்லலாம்.
டிரெக்கிங் செய்வோர், படிகள் வழியாக மலைக்கு செல்லலாம். கோட்டகல் மலையில் திம்மப்ப சுவாமி குடிகொண்டுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடக்கும். ராமாயணம் சம்பந்தப்பட்ட இடங்களை, இங்கு காணலாம். இரண்டு பெரிய பாறைக்கற்கள், சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது.
ஒரு நாள் சுற்றுலா செல்ல தகுதியான இடங்களில், கோட்டகல் மலையும் ஒன்று. அமைதியான சூழல், மனதுக்கும், கண்களுக்கும் விருந்தளிக்கும் இயற்கை காட்சிகளை அனுபவிக்கலாம்.
* ராமதேவரமலை
ராம்நகரில், பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையை ஒட்டியபடி, ராமதேவரமலை அமைந்துள்ளது. பெங்களூரில் இருந்து வெறும் 50 கி.மீ., தொலைவில் இந்த மலை உள்ளதால், காலை சென்று, மாலை திரும்பலாம். இங்கும் கூட ராமாயணத்தை நினைவூட்டும் இடங்கள் உள்ளன.
சீதை, லட்சுமணனுடன், ஸ்ரீராமன் வனவாசம் சென்ற போது, இந்த இடத்தில் தங்கியிருந்ததாக ஐதீகம். டிரெக்கிங் செய்பவர்கள் பாறை மீது ஏறி, டிரெக்கிங் செய்யலாம். இயற்கை எழிலை கண்டு ஆனந்திக்கலாம். ராமன், சீதை, ஆஞ்சனேயரையும் தரிசிக்கலாம். ராம்நகரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் ஜானபத லோகா உள்ளது. சிறார்களுக்கு அறிமுகம் செய்யலாம்.
* ரேவண சித்தேஸ்வரா மலை:
பெங்களூரில் இருந்து 70 கி.மீ., தொலைவில், ரேவண சித்தேஸ்வரா மலை உள்ளது. இதுவும் கூட ஒரே கல்லில் உருவான மலையாகும். குறுகலான படிகளில் ஏறி, மலை உச்சிக்கு செல்வது திரில்லான அனுபவத்தை கொடுக்கும். இரு புறங்களிலும் கண்களுக்கு இனிமை தரும் பச்சை பசேல் என்ற இயற்கை காட்சிகளை ரசித்தபடி, பறவைகளின் ரீங்காரத்தை கேட்டபடி மலை ஏறி செல்லும் போது, ஏற்படும் அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அனுபவித்து பார்க்க வேண்டும்.
* கப்பாளம்மா மலை:
பெங்களூரில் இருந்து, 80 கி.மீ., தொலைவில் கப்பாளம்மா மலை உள்ளது. ராம்நகர், கனகபுரா, சென்னபட்டணா வழியாகவும் இங்கு செல்லலாம். கப்பாளம்மாவை தரிசித்த பின், மலையேற வேண்டும். மலை மீதும் கோவில் உள்ளது. ஒருநாள் சுற்றுலா செல்ல தகுதியான தலங்களில், கப்பாளம்மா மலையும் ஒன்றாகும்.
* கொரணகெரே மலை:
ராம்நகர், சென்னபட்டணாவில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் கொரணகெரே மலை உள்ளது. பெங்களூரில் இருந்து வெறும் 75 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. மலை உச்சி வரை வாகனத்தில் செல்லலாம். டிரெக்கிங்கும் சென்று வரலாம். மலையில் நரசிம்மசுவாமி கோவிலை தரிசிக்கலாம்.
பெங்களூருக்கு வெகு அருகில், இந்த மலைபிரதேசங்கள் உள்ளன. பரபரப்பான வாழ்க்கையை விட்டு, ஒரு நாளாவது நிம்மதியாக பொழுது போக்க விரும்புவோர், மலைப் பிரதேசங்களுக்கு செல்லுங்கள். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியுடன் திரும்பலாம்.
***