ADDED : பிப் 19, 2025 10:21 AM

புதுடில்லி: இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போது தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜிவ் குமார் நேற்றுடன் ஓய்வு பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.,19) இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக ஞானேஷ் குமார் பதவியேற்றார்.
யார் இந்த ஞானேஷ் குமார்?
* இவர் 1964ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தார். இவர் கான்பூர் ஐஐடியில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார்.
* அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும் பட்டம் பெற்றார். கடந்த 1988ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
* கேரள பேட்ச் அதிகாரியான இவர் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணியாற்றினார். மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றி உள்ளார்.
* கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கிறார்.
* தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.