ADDED : பிப் 17, 2025 11:36 PM

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து அடுத்த தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்குமார் நியமிக்கப்பட்டதாக இன்று(பிப்.,17) பிரதமர் மோடி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் நாட்டின் 25-வது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக கடந்த 2022ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். வரும் பிப்ரவரி 18ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.
இந்நிலையில் அடுத்தாண்டு நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களை நடத்திட வேண்டி அடுத்த தலைமை தேர்தல் கமிஷனரை நியமிப்பது குறித்து இன்று (பிப்17-ம் தேதி) மோடி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.
இதில் லோக்சபா எதிர்கட்சிதலைவரும் காங். எம்.பி.யுமான ராகுல்,. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராம் அர்ஜூன் மெக்வால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின் புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்குமார் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இதற்கான அறிவிப்பு இன்று இரவு வெளியானது.
யார் இந்த ஞானேஸ்குமார்
1988ம் ஆண்டு கேரள ஐ.ஏ.எஸ். கேடரான ஞானேஸ்குமார், மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு (2024) லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க தயாராக இருந்த நேரத்தில் தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருந்த அருண் கோயல் என்பவர் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர் தான் ஞானேஸ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஸ்குமார் நியமிக்கப்பட்டார். வரும் 2029 ஜனவரி 26-ம் தேதி வரை இவர் பதவியில் இருப்பார். காலியாக உள்ள மற்றொரு தேர்தல் கமிஷனர் பதவிக்கு விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் இந்தாண்டு பீஹார் உள்ளிட்ட சில மாநிலத்திற்கும், 2026ம் ஆண்டு தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்கிறது
பதவியேற்பு
புதிய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஸ்குமார் பிப்.,19 அன்று பதவியேற்கிறார்.