மக்களிடம் சென்று பணியாற்றுங்கள்! அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
மக்களிடம் சென்று பணியாற்றுங்கள்! அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : ஜன 20, 2024 06:03 AM

பெங்களூரு: “மாவட்ட கலெக்டர்கள், அலுவலகத்தில் அமர்ந்திருந்தால் போதாது. அந்தந்த இடங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும்,” என, வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா உத்தரவிட்டார்.
பெங்களூரு, விகாஸ் சவுதாவில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆன்லைன் வழியாக, அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, நேற்று ஆலோசனை நடத்தினார்.அமைச்சர் பேசியதாவது:
வருவாய்த்துறை மற்ற துறைகளை விட, அதிகமாக பணியாற்ற வேண்டும். துறையை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசிடம் இருந்து, 500 கோடி ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இதை சரியாக பயன்படுத்த வேண்டும். தாசில்தார், பதிவு அதிகாரிகள், தாலுகா அலுவலக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.
சர்வே பணிகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கு தேவையான சர்வேயர்களை நியமிக்க வேண்டும். இவர்களை நியமிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி, பணியாற்ற வேண்டும்.
அதிகாரிகளும், மாவட்ட கலெக்டர்களும் அலுவலகத்தில் அமர்ந்திருந்தால் மட்டும் போதாது. அந்தந்த இடங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும்.
பிப்ரவரி முதல் வாரத்துக்குள், அனைத்து தாலுகாக்களின் தாசில்தார்கள், வறட்சி நிர்வகிப்பு உட்பட, மற்ற விஷயங்கள் குறித்து செயற்படை கூட்டங்கள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.