ADDED : மார் 13, 2024 02:02 AM

உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., - எம்.பி., ஷோபாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்று, பெலகாவியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை நிறுத்த, உள்ளூர் பா.ஜ., தலைவர் மஹாந்தேஷ் கவடகிமத் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்ளில் 'கோ பேக் ஜெகதீஷ் ஷெட்டர்' போஸ்டர் பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
எடியூரப்பா ஆதரவு
உடுப்பி - சிக்கமகளூரு பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய விவசாய துறை இணை அமைச்சருமான ஷோபாவுக்கு, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆதரவு தெரிவித்து உள்ளார். ஆனாலும் உள்ளூர் பா.ஜ., தலைவர்கள், ஷோபா மீது அதிருப்தியில் உள்ளனர்.
இத்தொகுதிக்கு உள்ளூர் பிரமுகரமான பிரமோத் மத்வராஜுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
ஷோபாவுக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் 'கோ பேக் ஷோபா' பிரசாரம் துவங்கியது.
அடுத்து ஷெட்டர்
இதேபோன்று, பா.ஜ., முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கும் ஏற்பட்டு உள்ளது. கடந்தாண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர், தேர்தலில் தோல்வியடைந்தார். ஆனாலும், எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் அவரின் ஆதரவு முக்கியம் என்பதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், அவரிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தது. அவர்கள் நினைத்தது போன்று, காங்கிரசில் இருந்து விலகிய அவர், பா.ஜ.,வில் நிபந்தனையின்றி இணைந்தார் கூறப்பட்டது.
ஆனால் நாளடைவில், 'கட்சி மேலிடம் உத்தரவிட்டால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்' என கூற துவங்கினார். தற்போது கட்சி மேலிடமும், அவருக்கு, பெலகாவியில் சீட் தர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பெலகாவிக்கு வந்து நான்கு மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது, இந்த யூகத்துக்கு வலு சேர்த்து உள்ளது.
தற்போதைய பெலகாவி எம்.பி., மங்களா அங்கடி, ஈரண்ணா கடாடி, மஹாந்தேஷ் கவடகிமத், சஞ்சய் பாட்டீல், ஷ்ரத்தா ஷெட்டர் போன்ற முக்கிய தலைவர்கள், உத்தேச பட்டியலில் உள்ளனர்.
அதுபோன்று, சிக்கோடிக்கு தற்போதைய எம்.பி., அண்ணாசாகேப் ஜொல்லே, முன்னாள் எம்.பி., ரமேஷ் கத்தி, பிரபாகர் கோரின் மகன் அமித் கோரே ஆகியோரும் சீட் கேட்டு உள்ளனர்.
அதிர்ச்சி
இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டரின் பெயர், இத்தொகுதிக்கு அடிபடுவது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக, மூத்த தலைவர் மஹாந்தேஷ் கவடகிமத் ஆதரவாளர்கள், ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக பிரசாரத்தை துவக்கி உள்ளனர்.
சமூக வலைதளங்களில், 'கோ பேக் ஜெகதீஷ் ஷெட்டர்' என பிரசாரம் செய்து வருகின்றனர். 'எங்கள் நலனில் அக்கறை உள்ள உள்ளூர் தலைவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போம். பதவிக்காக கட்சி மாறும் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது ' என கூறி வருகின்றனர்.
ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரவும் 'கோ பேக் ஷெட்டர்' பிரசாரம்.

