ADDED : ஜன 27, 2025 10:12 PM

- நமது நிருபர் -
சில ஏரிகளுக்கும், ஆன்மிகத்துக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இதுபோன்ற புனிதமான ஏரிகளில் பானந்தி ஏரியும் ஒன்றாகும். இங்கு குடி கொண்டுள்ள பானந்தி அம்மன், குழந்தைகளை காப்பதாக ஐதீகம்.
உத்தரகன்னடா மாவட்டத்தில், ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றில் பானந்தி கோவிலும் ஒன்று. உத்தரகன்னடா, முன்டகோடாவின், சாலகாவ் கிராமத்தில் பானந்தி தேவி கோவில் உள்ளது. கோவிலில் சிறப்பான சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது.
கோவில் முன்பாக உள்ள பானந்தி ஏரியில், பச்சிளம் குழந்தைகளை வாழை இலையில் வைத்து, சில வினாடிகள் மிதக்க விடுகின்றனர்.
இது மெய் சிலிர்க்கும் காட்சியாக இருக்கும். ஒரு மாத குழந்தை, இரண்டு மாத குழந்தை, பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தைகளையும் நீரில் மிதக்க விடுகின்றனர்.
பானந்தி ஏரி நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இது பாழடைந்த பூமியாக இருந்தது. இந்த ஏரியை நிரப்ப மக்கள் எடுத்து கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
ஒரு நாள் பெண்ணொருவர், தன் தந்தையுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்பெண் தன் பச்சிளம் குழந்தையை இடுப்பில் வைத்திருந்தார்.
ஏரிக்கரையில் நின்றிருந்த போது, ஆச்சரியமான சம்பவம் நடந்தது. ஏரியில் மளமளவென தண்ணீர் நிரம்பியது. தாயும், குழந்தையும் நீரில் மூழ்கினர். அன்று முதல் அவரை மக்கள் தெய்வமாக கருதினர். திருமணமாகி 10 ஆண்டு, 20 ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாதவர்கள், இந்த கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
குழந்தை பிறந்தால் கோவில் ஏரியில் மிதக்க விடுவதாக வேண்டுதல் வைத்தால், குழந்தை பிறப்பதாக ஐதீகம். குழந்தையை இங்கு கொண்டு வந்து, வாழை இலையில் வைத்து மிதக்க விடுகின்றனர்.
குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலும், இங்கு வேண்டி கொண்டால் போதும். உடனடியாக சரியாகிறது. மாலை 5:00 மணி முதல், 6:00 மணி வரையிலான காலத்தில், குழந்தைகளை மிதக்க விடுகின்றனர். இப்படி மிதந்தால், நோய், நொடிகள் அண்டாமல் குழந்தைகள் நலமுடன் வாழ்வதாக, மக்கள் நம்புகின்றனர்.
ஆண்டுக்கு ஒரு முறை, கோவிலில் திருவிழா நடப்பது வழக்கம். அன்றைய தினம் வாழை தண்டுகளால் உருவாக்கப்பட்ட ரதத்தில், பானந்தி அம்மன் ஊர்வலம் நடக்கும்.
இதை காண அக்கம், பக்கத்து பகுதிகளின் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.

