ADDED : செப் 24, 2024 07:14 AM

கர்நாடகாவில் மாயம், மாந்த்ரீகம், துஷ்ட சக்திகளில் இருந்து பக்தர்களை காப்பாற்றும் பல கோவில்கள் உள்ளன. இவற்றில் பிரத்யங்கரா தேவியின் கோவிலும் ஒன்று.
மற்றவரின் வளர்ச்சியை சகிக்க முடியாமல், அவர்களை ஒழிக்க மாயம், மாந்த்ரீகம் செய்யும் துர்புத்தி கொண்டவர்கள், இன்றைக்கும் உள்ளனர்.
இத்தகைய செயல் வாழ்க்கையில் இன்னல்களை ஏற்படுத்தும் என, மக்கள் நம்புகின்றனர். இதில் இருந்து விடுபட கடவுளை நாடுவர். துஷ்ட சக்திகளில் இருந்து மீட்கும் கோவில்கள், கர்நாடகாவிலும் உள்ளன.
வரப்பிரசாதம்
ஷிவமொகா விமான நிலையத்தின் முன் பகுதியிலேயே பிரத்யங்கரா தேவி கோவில் அமைந்துள்ளது. பக்தர்களின் கஷ்டங்களை நொடிப்பொழுதில் அகற்றி, நல்வாழ்வு அளிக்கும் புண்ணிய தலங்களில், இதுவும் ஒன்றாகும்.
மாயம், மாந்த்ரீகம், பில்லி, சூன்யம் போன்ற தீய சக்திகளால் அல்லல்படும் பக்தர்களுக்கு, இந்த கோவில் வரப்பிரசாதமாகும்.
இங்கு காய்ந்த மிளகாயை அரைத்து, பிரத்யங்கரா தேவியின் உடலில் பூசிவிட்டால் போதும், எந்த தீய சக்திகளும் அண்டாது என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளுக்கு, காய்ந்த மிளகாயை அரைத்து பூச உகந்த நாள்.
இந்த கிழமைகளில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து மிளகாய் அரைத்து பூசி, வேண்டுதல் வைப்பர். கோவிலில் உள்ள சுப்ரித் குருஜியை சந்தித்து, பிரச்னைகளை கூறி பரிகாரம் பெறுகின்றனர்.
மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியில் மிளகாய் ஹோமம் நடத்தப்படுகிறது. இதை காண்பதால் தோஷங்கள் நிவர்த்தியாகும், தீய சக்திகள் விலகும். பிரத்யங்கரா தேவிக்கு நாடு முழுதும் பக்தர்கள் உள்ளனர்.
சுயம்புவாக உருவானது
நான்கு வேதங்களில் ஒன்றான, அதர்வண வேதத்தில் பிரத்யங்கரா தேவியை பற்றி கூறப்பட்டுள்ளது. இவர் உக்ரமான அம்மன் என, புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள பிரத்யங்கரா தேவியின் சிலையை யாரும் செதுக்கவில்லை. சுயம்புவாக உருவானதாம்.
பொதுவாக மிளகாயை தீயில் போட்டால், நெடியை சமாளிக்க முடியாது. ஆனால் அமாவாசை, பவுர்ணமிகளில் இங்கு நடக்கும் ஹோமத்தில் கிலோக்கணக்கில் மிளகாயை பயன்படுத்துகின்றனர். ஆனால் மிளகாய் வற்றல் நெடி எதுவும் வருவதில்லை என்பது, ஆச்சரியமான ஒன்று.
ஐந்து அமாவாசை, பவுர்ணமி அல்லது ஞாயிற்றுக்கிழமை பிரத்யங்கிரா தேவிக்கு, மிளகாய் அரைத்து தடவினால், தீய சக்திகள் மட்டுமின்றி, பேய் பிடித்திருந்தாலும் ஓடிவிடுமாம்.