தொடர்ந்து சரியும் தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.880 குறைவு
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.880 குறைவு
ADDED : நவ 14, 2024 10:42 AM

சென்னை: தமிழகத்தில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிரடியாக குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை குஷியாக்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள், வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், உலக அளவிலான முதலீட்டாளர்கள், கடந்த மாதத்தில் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தனர். இதனால், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது.
அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இருப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதனால், உலக முதலீட்டாளர்கள் தங்கம் தவிர்த்து, 'டாலர்' உள்ளிட்ட முதலீட்டு திட்டங்களில் அதிக முதலீடு செய்கின்றனர்.
இதனால், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த இரு தினங்களாக ரூ. 1,400 வரையில் குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ரூ. 880 குறைந்து, ஒரு சவரன் ரூ. 55,480க்கும், விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.110 சரிந்து ரூ.6,935க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99க்கும், கிலோவுக்கு ரூ.2,000 சரிந்து ரூ. 99 ஆயிரத்திற்கும் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 5 நாட்களின் தங்கத்தின் (22 காரட்) விலை
14-11-2024- ஒரு சவரன் ரூ. 55,480
13-11-2024- ஒரு சவரன் ரூ. 56,360
12-11-2024- ஒரு சவரன் ரூ. 56,680
11-11-2024- ஒரு சவரன் ரூ. 57,760
10-11-2024- ஒரு சவரன் ரூ. 58,200