ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல்: ம.பி.யில் அதிர்ச்சி
ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பறிமுதல்: ம.பி.யில் அதிர்ச்சி
ADDED : அக் 10, 2025 04:36 PM

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் லோக் ஆயுக்தா நடத்திய ரெய்டில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் 17 டன் தேன் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜிபி மெஹ்ரா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, லோக் ஆயுக்தாவின் டிஎஸ்பி மட்டத்திலான அதிகாரிகள் போபால் மற்றும் நர்மதாபுரத்தில் நான்கு இடங்களில் மெஹ்ராவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். மணிபுரம் காலனியில் உள்ள மெஹ்ராவின் சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8.79 லட்சம் ரொக்கம், 50 லட்சம் மதிப்பு தங்கம், ரூ.56 லட்சம் அளவுக்கு பிக்சட் டெபாசிட் செய்த ஆவணங்கள் சிக்கின.
அடுத்ததாக, தனாபானி நகரில் உள்ள அவரது இரண்டாவது வீட்டில் நடந்த சோதனையில் ரூ.26 லட்சம் ரொக்கம், 2.6 கிலோ தங்கம் ( ரூ.3.05 கோடி மதிப்பு) மற்றும் 5.5 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது சொந்த கிராமத்தில் உள்ள வீட்டில் நடந்த சோதனையில் தான் 17 டன் தேன், 6 டிராக்டர்கள், புதிதாக கட்டப்படும் 32 குடியிருப்புகள், கட்டிமுடிக்கப்பட்ட 7 குடியிருப்புகள், குளம் உள்ளிட்டவை அவரது பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன், போர்டு என்டேவர், ஸ்கோடா ஸ்லவியா, கியா சோனட், மாருதி சியாஜ் உள்ளிட்ட கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கார்கள் அனைத்தும் மெஹ்ராவின் குடும்பத்தினரின் பெயரில் பறிமுதல் செய்யப்பட்டன.
இத்துடன் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது என கருதப்படும் நிறுவனத்திலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.25 லட்சம் ரொக்கம், தொழிற்சாலைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றுடன், அவரது பினாமிகள் மற்றும் கூட்டாளிகள் குறித்த தகவல்களும் சிக்கின.
மொத்தத்தில் அவரிடம்
* ரூ.36.04 லட்சம் ரொக்கம்,
* 2.649 கிலோ தங்கம்
* 5.523 கிலோ வெள்ளி,
* பிக்சட் டெபாசிட்கள் காப்பீடுகள்
* பங்குச்சந்தை ஆவணங்கள்
* பல்வேறு சொத்துகள்,
* 4 கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகள் மூலம் அவரது பினாமி சொத்துகள் குறித்த விவரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.