பாக்., வீரர் ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா: தற்போது வெளிவந்த நெகிழ்ச்சி கதை
பாக்., வீரர் ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா: தற்போது வெளிவந்த நெகிழ்ச்சி கதை
UPDATED : ஆக 09, 2024 12:57 PM
ADDED : ஆக 09, 2024 12:49 PM

புதுடில்லி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், புதிய ஈட்டி வாங்க சிரமப்பட்டபோது, அவருக்கு உதவும்படி இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கோரியிருந்தார். அதில் கிடைத்த உதவிகளை வைத்து புதிய ஈட்டியை வாங்கி பங்கேற்ற பாக்., வீரர் தங்கம் வென்றார்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இம்முறை 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளி வென்றார். பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம், 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி ஒலிம்பிக் சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
நீரஜ் சோப்ராவின் வெற்றி குறித்து அவரது தாயார் சரோஜ் தேவி கூறியதாவது: நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதுதான். தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரும் என் பிள்ளை தான். நீரஜ் காயமடைந்தார்; காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றியால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
நீரஜ் உதவி
தங்கம் வென்ற பாக்., வீரர் புதிய ஈட்டி வாங்கவே சிரமப்பட்டுள்ளதும், அவருக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா உதவியதும் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் புதிய ஈட்டியை வாங்க சிரமப்பட்டு, உதவி கோரி சமூக வலைதளத்தில் அர்ஷத் நதீம் பதிவிட்டுள்ளார். இதனையறிந்த நீரஜ் சோப்ரா, அவருக்கு உதவி செய்யும்படி பொதுமக்களிடம் கோரியிருந்தார். இதன்மூலம் கிடைத்த உதவிகளால் புதிய ஈட்டியை வாங்கிய அர்ஷத் நதீம், அதை வைத்து ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
![]() |